குற்றமிழைத்தவர்கள் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்
இலங்கையில் நிகழ்ந்தது இனப்படுகொலையே என வடமாகாண சபையில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் குற்றமிழைத்தவர்கள் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தும் அந்த பிரேரணைக்கு சபையின் எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளமை வரவேற்கத்தக்கது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கடந்த 10ஆம் திகதி வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட இன அழிப்பு பிரேரணைக்கு தமிழகத்தின் பல்வேறு கட்சிகளும் தமது ஆதரவை தெரிவித்துள்ளன.ஆட்சியில் இருக்கும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இது தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் வெளியிடாத நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பேச்சாளர் இளங்கோவன் இதுபற்றி குறிப்பிட்டுள்ளார்.
பிரேரணை நிறைவேற்றப்பட்டமையானது தமிழ் மக்களின் நீண்ட கால பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்குமென்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.எனினும் தமிழ் மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விடயத்தில் ஸ்ரீலங்காவில் புதிய அரசாங்கத்திற்கு சிறிது காலம் அவகாசம் வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
வட மாகாண சபையில் குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டமையானது வரவேற்கத்தக்கதென மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ குறிப்பிட்டுள்ளார்.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், உள்ளிட்டோரும் இந்த பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.