புதிய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகும் ஜே.வி.பி
அரசாங்கத்திற்கு எதிராக எதிர்வரும் 26ம் திகதி ஜே.வி.பி கட்சி மக்கள் போராட்டமொன்றை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி.க்கு எதிரான வழக்கு விசாரணைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படாமை இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படாமை அதிருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக ஜே.வி.பி கட்சியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட நபர்களுக்கு எதிராக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் அதற்கு எதிராக நாட்டு மக்களுடன் இணைந்து வீதியில் இறங்கிப் போராட்டம் நடாத்த தயங்கப் போவதில்லை.
அரசியல் அமைப்பு திருத்தங்களை மட்டும் அமுல்படுத்துவது நல்லாட்சியாக அமையாது. ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
உரிய முறையில் விசாரணை நடத்தி உரிய தண்டனைகள் துரித கதியில் விதிக்கப்பட வேண்டும். ஊழல் மோசடிகள் தொடர்பில் அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கோரி எதிர்வரும் 26ம் திகதி கோட்டை ரயில் நிலையத்திற்கு எதிரில் மக்கள் போராட்டமொன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.