ரணில், மைத்திரி ஆகியோர் 'பிட்பொக்கட்' அடித்தே பதவிகளை கைப்பற்றினர் - நலின் டி சில்வா
இலங்கையில் ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் பிரதமர் ஊடகங்களை அச்சுறுத்துவதாகவும் ஜாதிக பலய என்ற அமைப்பின் பேராசிரியர் நலின் டி சில்வா தெரிவித்துள்ளார்.
மக்கள் வாக்களித்து ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்கவில்லை என்றும் ரணில் அதனை ´பிட்பொக்கட்´ அடித்துள்ளதாகவும் கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அமைச்சரவையை மாற்றியதை அனுமதிக்க முடியாது என்றும் அதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். ரணிலைப் போன்று ஜனாதிபதி மைத்திரியும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிடம் இருந்து ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைவர் பதவியை பிட்பொக்கட் அடித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ரணில் விக்ரமசிங்க சிங்கள பத்திரிகைகள் பற்றி அச்சுறுத்தல் விடுக்கும் அதேவேளை வடக்கில் உதயன் பத்திரிகை குறித்து எதுவும் பேசுவதில்லை என நலின் டி சில்வா தெரிவித்தார். தமிழ் பயங்கரவாதத்தை முறியடித்துள்ள போதும் பிரிவினைவாதத்தை முறியடிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.