Breaking News

இந்திய விஜயத்துக்கு முன்னதாக ஜனாதிபதி பேசவில்லை - வடக்கு மீனவர்கள்

இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக  இந்தியாவுக்கு   மேற்கொள்கின்ற பயணத்தின்போது, இந்திய பிரதமருடன் இரு நாட்டு மீனவர்களின் பிரச்சினை குறித்தும் முக்கிய பேச்சுக்கள் நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில், இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக தமது பிரச்சனைகள் குறித்து புதிய அரசாங்கம் தங்களுடன் கலந்தாலோசிக்கவில்லை என்று வடக்கு-இலங்கை மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வந்து இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதனால் வடக்கு இலங்கை மீனவர்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட மீனவர் சங்கப் பிரதிநிதிகள், முன்னைய அரசாங்கத்தைப் போன்று இந்த அரசாங்கமும் தமது பிரச்சனைகள் குறித்து பாராமுகமாக நடந்துகொள்ள முயற்சிக்கின்றதோ என்று தங்களுக்கு சந்தேகம் எழுந்திருப்பதாகத் கூறியுள்ளனர்.

இந்திய விஜயத்துக்கு முன்னதாக, மீனவர் பிரச்சனைகள் குறித்து உயர் மட்ட கலந்துரையாடலை நடத்திய ஜனாதிபதியின் கூட்டத்திற்கு மீனவர் பிரதிநிதிகள் அழைக்கப்படவில்லை என்று மன்னார் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசத் தலைவரும் யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவருமான நூர் மொஹமட் ஆலம் சுட்டிக்காட்டினார்.

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடி நடவடிக்கை காரணமாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்தும், அவற்றைத் தீர்ப்பதற்கு தாங்கள் எதிர்பார்த்துள்ள வழிவகைகள் குறித்தும் வடமாகாண மீன்பிடித் துறை அமைச்சர் மற்றும் வடமாகாண முதலமைச்சர் ஆகியோரிடம் எடுத்துக் கூறியுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆனாலும், ஜனாதிபதியுடனான சந்திப்பில் மீனவர் பிரதிநிதிகள் கலந்து கொள்வதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை என்றும் மொஹமட் ஆலம் தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்கள் எல்லைதாண்டி வருவதை முற்றாக தடுத்து நிறுத்தவும் இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ள மீன்பிடி முறைகளைக் கைக்கொள்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து அவற்றைத் தடை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளார்கள்.