போர்க்குற்றவாளிகளை தண்டித்து விட்டு பொதுமன்னிப்பு அளிக்க திட்டம்
போரின்போது இடம்பெற்ற மீறல்கள் குறித்து உள்நாட்டு விசாரணைகளை நடத்தி, குற்றம் இழைத்தவர்களுக்குத் தண்டனை பெற்றுக் கொடுத்து விட்டு பின்னர் அவர்களுக்கு பொதுமன்னிப்பு அளிக்கலாம் என்று யோசனை கூறியுள்ளார் முன்னாள் வெளிவிவகார பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா.
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் பிரதி வெளிவிவகார அமைச்சராக இருந்த போது, நியோமல் பெரேரா, ஐ.நாவின் விசாரணைகளையும், அனைத்துலகத் தர நியமங்களுக்கேற்ப உள்நாட்டு விசாரணைகளை நடத்தும் யோசனைகளையும் நிராகரித்து வந்தவர்.
ஆனால், அவர் தற்போது அனைத்துலகத் தடைகளை தவிர்த்துக் கொள்வதற்காக, அனைத்துலகத் தரம் வாய்ந்த உள்நாட்டு விசாரணைகளை நடத்துவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
“சுதந்திரமான உள்நாட்டு விசாரணைக் குழுவொன்றை அமைத்து, விசாரணைகளை நடத்தி, குற்றம்செய்தவர்கள் அரசதரப்பினராக அல்லது விடுதலைப் புலிகளாக யாராக இருந்தாலும் அவர்களைத் தண்டிக்கலாம்.
பின்னர், சில ஆண்டுகளில் அவர்களுக்குப் பொதுமன்னிப்பு அளிக்க முடியும்.
இருதரப்பினராலும் இழைக்கப்பட்ட குற்றங்களுக்குத் தீர்வு காணப்படாவிட்டால், அது பொருளாதாரத் தடைகள் உள்ளிட்ட அழுத்தங்களினால் நாட்டுக்கும், மக்களுக்கும், தொடர் பாதிப்புகளையே ஏற்படுத்தும்.
அதனைத் தவிர்ப்பதற்கு உள்நாட்டு விசாரணைகளின் மூலம் நடவடிக்கை எடுப்பதே நல்லது” என்றும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.