Breaking News

பேச்சுவார்த்தைகள் மூலமே இனப்பிரச்சினைக்கான தீர்வினை எட்டமுடியும் - கரு ஜெயசூரிய

நாங்கள் சமாதானக்கரம் நீட்டுவது போல நீங்களும் எங்களை நோக்கி சமாதானக்கரம் நீட்டுங்கள் என புத்தசாசன மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கரு ஜெயசூரிய யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார். 

 வடக்கு மாகாண விசேட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று யாழ். பொதுநூலகத்தில் இடம்பெற்றது. அதிதியாக கரு ஜெயசூரிய கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வாழ்த்துக்களை இந்த வடக்கு மாகாண மக்களுக்கு தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.

 நான் இங்கு வந்ததன் முக்கிய நோக்கம் வடக்கு மாகாணத்தை நோக்கி சமாதானக் கரங்களை நீட்டுவதற்கே. ஜனவரி 8 இல் நாட்டு மக்கள் அனைவரும் சமாதானமான அமைதியான சூழல் ஒன்றினையும் உருவாக்கியுள்ளனர். ஜனாதிபதி மற்றும் பிரதமர் நாட்டு மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை இந்த 100 நாள் வேலைத்திட்டத்தில் நிறைவேற்றி வருகின்றனர் .

 நான் இப்போது 100 நாள் வேலைத்திட்டத்தின் அரசில் அமைச்சராக இருக்கின்றேன். தற்போது 6 வாரங்கள் முடிவடைந்துள்ளன. அவற்றில் பல விடயங்களை செய்து முடித்துள்ளோம். ஏனையவற்றையும் செய்து முடிப்பதற்கு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம். நான் பிரச்சினைகள் பற்றிப் பேச வரவில்லை. கொள்கைகள் பற்றிப் பேசவே வந்துள்ளேன். அதனால் இன்றைய நாளை முக்கிய நாளாக கருதுகின்றேன். அனைத்து மாகாணங்களின் ஆளுநர்கள், முதலமைச்சர்கள், அமைச்சர்களை அழைத்து இங்குள்ள பிரச்சினைகளுக்கு எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி பேசவுள்ளோம். 

 எந்தப்பிரச்சினையாக இருந்தாலும் கலந்துரையாடல்கள் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. மத்திய அரசும் மாகாண அரசும் ஒன்று சேர்ந்து செயற்பட்டால் அதன் பயன்கள் இங்குள்ள மக்களுக்குக் கிடைக்கும். வடக்கு முதலமைச்சர் கூறிய தேவைகளை எம்மால் படிப்படியாக நிறைவேற்ற முடியும் என நான் நம்புகின்றேன். 

எமது அரசின் நோக்கம் எல்லோருடைய பிரச்சினைகளையும் தீர்த்து ஐக்கியமான சூழலை கட்டியெழுப்புவதே. நாட்டு மக்களுக்கு சேவையாற்றும் போது நிதியை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த உள்ளோம். இதனால் வீண் விரயங்களை குறைத்துக் கொள்ளலாம். எமது ஜனாதிபதி கூட இந்தியாவிற்கு சாதாரண விமானத்திலேயே சென்றிருந்தார். தற்போது ஏற்பட்டுள்ள ஜனநாயக சூழலில் வெளிநாடுகள் பல எமது நாட்டிற்கு உதவிகளை மேற்கொள்வதற்கு தயாராக உள்ளனர். 

மேலும் அன்று தொடக்கம் இன்றுவரை நாம் ஒற்றுமையாக இருக்கவே இருந்து வருகின்றோம். எனவே எமது சமாதானக்கரம் உங்களை நோக்கி நீள்வதைப் போல உங்களுடைய கரங்களும் எங்களை நோக்கி நீள வேண்டும் என்றார்.