Breaking News

இலங்கை - இந்திய மீனவர் பேச்சு பின்போடப்பட்டது!

இலங்கை - இந்திய மீனவர்களுக்கு இடையில் மார்ச் மாதம் 5ஆம் திகதி கொழும்பில் நடைபெறவிருந்த இருதரப்பு பேச்சுவார்த்தைகள் பின்போடப் பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து மீன் கொள்வனவு செய்வது தொடர்பாக இலங்கை அரசுக்கும், ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுக்கும் இடையில் 6 ஆம் திகதி பேச்சுவார்த்தைகள் நடைபெறவிருப்பதாகவும் அதன் காரணமாகவே இலங்கை-இந்திய மீனவப் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

நிபந்தனையில்லாமல் இருதரப்பு மீன் பிடிப்புக்கு இந்தியா ஆலோசனை

இதேவேளை இலங்கை-இந்திய மீனவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக நிபந்தனைகள் அற்ற முறையில் இருநாட்டின் கடற்பரப்புக்களிலும் இருதரப்பு மீனவர்களும் மீன் பிடிக்கலாம் என்ற யோசனையை இந்தியா இலங்கையிடம் முன் வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மாதத்தில் 7 நாட்கள் இவ்வாறு இந்திய மீனவர்கள் இருதரப்புக் கடலிலும் மீன்பிடியில் ஈடுபடுவார்கள் என்றும் இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் இந்த யோசனையை இலங்கை மீன்பிடித்துறை அமைச்சுப் பணிப்பாளர் நிமால் ஹெட்டியாராய்ச்சி நிராகரித்துள்ளதாக மன்னார் மீனவர் சம்மேளனத் தலைவர் யஸ்ரின் சில்வா தெரிவித்தார்.

இந்தப் புதிய நிலைப்பாடு தொடர்பாக மீனவர் சங்கப் பிரதிநிதிகளுக்கிடையில் கொழும்பில் நடைபெற்ற இலங்கை மீனவர் மகாசம்மேளனக் கூட்டத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் யஸ்ரின் சில்வா தெரிவித்தார்.