நிபுணர்குழுவின் விசாரணைக்கு அமையவே இறுதித் தீர்மானம் -ரணில்
சீனாவின் கொழும்பு துறைமுக நகரத்திட்டத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட எவருக்கும் மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். இது அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். இதனை சீனப்பிரதிநிதிகளும் ஏற்றுக்கொண்டுள்ளனர் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சபையில் தெரிவித்தார்.
கொழும்பு துறைமுக நகரத்திட்டம் தொடர்பாக நிபுணர்குழு மற்றும் அமைச்சரவை உபகுழு ஆகியவற்றின் விசாரணை அறிக்கைகளுக்கு அமைவாக தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஆட்சியாளர்கள் இத்திட்டத்தினை வெளிப்படைத்தன்மையாக முன்னெடுக்கவில்லை. உண்மைகளை மூடி மறைத்தனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை 23இன் கீழ் இரண்டு பிரிவின் பிரகாரம் விசேட கூற்றொன்றை முன் வைத்து உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் பிரதமர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
சீனாவின் கொழும்பு துறைமுகத்திட்டம் தொடர்பாக கடந்த சில காலங்களாக ஊடகங்களிலும் அரசியல் கட்சிகள் மத்தியிலும் பலதரப்பட்ட கருத்துக்களும் விவாதங்களும் நாட்டுக்குள் இடம்பெற்று வருகின்றன.
கொழும்பு துறைமுக நகரத்திட்ட நிர்மாணம் தொடர்பாக கடந்த ஆட்சியாளர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளில் சட்ட ரீதியான அல்லது ஒழுக்க ரீதியான கடப்பாடுகள் எதுவும் காணப்படவில்லையென்பதை நாம் அன்று இச்சபையில் தெளிவுபடுத்தினோம்.
கேள்விகளைக் கேட்டோம் பதில்களை எதிர்பார்த்தோம். அன்றைய சபைத்தலைவர் நிமால் சிறிபால டி சில்வா கீழ்க்கண்டவாறு தெரிவித்திருந்தார்.2014 பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி ஹன்சாட் அறிக்கையில் இவ்வாறு பதியப்பட்டுள்ளது. ''இத்திட்டம் அனைத்தும் சட்ட திட்டங்களுக்கமைய ஏற்படுத்தப்பட்டுள்ளது. அது தொடர்பான ஆவணங்கள் இச்சபையில் முன்வைக்கப்படும்.'' என்று அன்று சபை முதல்வர் கூறினார்.
ஆனால் இவ்வாறு தெரிவிக்கப்பட்டு 11 மாதங்கள் கடந்தும் நிமால் சிறிபால டி சில்வா உட்பட கடந்த அரசாங்கம் இது தொடர்பில் எதனையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை.
இதேவேளை அன்றைய பிரதமர் டி.எம்.ஜயரத்னவும் 2014 மார்ச் 4ஆம் திகதி இத்திட்டம் தொடர்பான ஆய்வறிக்கையை சபைக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்தார்.ஆனால் ஜனாதிபதித்தேர்தலில் தோல்வி யடையும் வரையில் அவ்வாறான எந்தவொரு அறிக்கையும் சமர்ப்பிக்கவில்லை. இத்திட்டம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட அனைத்து விடயங்களிலும் வெளிப்படைத்தன்மை காணப்படவில்லை.சட்ட ரீதியான பல விடயங்கள் அங்கீகரிக்கப்படவில்லை. இத்திட்டம் தொடர்பான உடன்படிக்கை அமைச்சரவை அனுமதியின்றியே கையெழுத்திடப்பட்டது.
சூழலியல் தொடர்பான சாதக பாதக அறிக்கைகளும் பெற்றுக்கொள்ளப்படவில்லை. ஆட்சியை நாம் கைப்பற்றிய பின்னர் இவ்விடயங்கள் அனைத்தும் தொடர்பில் ஆராய்ந்தோம். இதன் போது பல விடயங்கள் சந்தேகத்திற்கு உரியதாக காணப்பட்டதை அவதானிக்க கூடியதாக இருந்தது.
கடந்த ஆட்சியாளர்கள் இத்திட்டம் தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் சபைக்கு முன் வைக்காது மறைத்தமை தெரிய வந்தது.அது மட்டுமல்லாது இச்சபைக்கு பொய்யான தகவல்கள் முன்வைக்கப்பட்டன. இவ்வாறானதொரு சூழ்நிலையில் கொழும்பு துறைமுக நகரத்திட்டம் தொடர்பாக ஆராய்வதற்கு நாம் நிபுணர் குழுவொன்றை நியமித்தோம்.
அஜித் டி கொஸ்தாவே இக்குழுவின் தலைவராவார். ஏனைய உறுப்பினர்களான பேராசிரிய ருசிர குமார, கலாநிதி என்.பி. விஜயாநந்த, கலாநிதி அனில் பிரேமரத்ன, பேராசிரியர் சமந்த ஹெட்டியாராச்சி, சன்ன பெர்னானாந்து மற்றும் ஒபேசேகர, சுனிலா ஜயவர்த்தன ஆகியோர் இக்குழுவின் அங்கத்தவர்களாக நியமிக்கப்பட்டனர்.
இந்த நிபுணர்களின் அறிக்கையை ஆராய்ந்து மேலதிகமாக கண்டறியப்பட வேண்டிய நிலைமைகள் தொடர்பாக அவதானித்து தீர்மானங்கள் எடுப்பதற்காக எனது தலைமையில் அமைச்சரவை உப குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
இக்குழு மற்றும் உபகுழு என்பன துறைமுக நகரத்திட்டம் தொடர்பாக ஆழமாகமற்றும் கவனமாக விடயங்களை ஆராய்ந்து வருகின்றன.இத்திட்டத்தின் அனைத்து பிரிவுகள் தொடர்பாகவும் கவனமாக ஆராய்ந்து பார்த்து வருகின்றது.அது மட்டுமல்லாது இக்குழுவின் முறைப்பாடுகள் தொடர்பாகவும் தேடிப்பார்க்கப்படும்.அது மட்டுமல்லாது சூழலியலாளர்களின் முறைப்பாடுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்தை நிறுத்துவது தொடர்பாக முடிவெடுக்கப்படவில்லையென அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.ஆனால் இத்திட்டத்தின் உடன்படிக்கை முழுமையாக ஆராயப்படுவதோடு உடன்படிக்கையின் சட்ட ரீதியான அந்தஸ்து தொடர்பிலும் ஊழல் மோசடிகள் இடம்பெற்றிருந்தால் அது குறித்தும் ஆராயப்படும்.
அதேவேளை இத்திட்டத்தினால் நாட்டுக்கு ஆபத்தான சூழ்நிலைகளை ஏற்படுத்துவதாக இருக்கின்றதா என்பதும் ஆராயப்பட்டு அது தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். எமது விசேட நிபுணர் குழு அறிக்கை மற்றும் விசாரணைகள் ஊடாக வெளியாகும் உண்மைத் தன்மைக்கமைய இறுதித் தீர்மானம் எடுக்கப்படும். அத்தோடு இது தொடர்பாக சபைக்கு தெளிவுபடுத்தப்படும்.
இத்திட்டம் தொடர்பான விபரங்கள் மூடி மறைக்கப்பட்டதன் காரணமாகவே இவ்விவகாரம் பூதாகரமாக மாறியது.சீனப் பிரதி நிதிகள் மற்றும் சீன கம்யூனிஸ கட்சி பிரதிநிதிகளுடனும் நானும் ஜனாதிபதியும் இத்திட்டம் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தினோம்.இதன்போது இறுதியில் அரசியல்வாதிகளாகட்டும் அதிகாரிகளாகட்டும் அரச நிறுவனங்கள் அல்லது கம்பனிகளாகட்டும் இவர்கள் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டிருப்பார்களானால் அவர்களுக்கு மன்னிப்பே வழங்கப்படமாட்டாது.
ஊழல் மோசடிகள் காரணமாக இலங்கை – சீன நாடுகளுக்கிடையேயான நட்புறவை சீர்குலைக்க இடமளிக்க முடியாது இடமளிக் கவும் மாட்டோம்.இலங்கையில்லாகட்டும் சீனா வில்லாகட்டும் மோசடிகளுக்கு இடமளிக்கமாட்டோம்.சீனாவும் இவ்விடயத்தில் ஒரே கொள்கையில் இருக்கின்றது என்றார்.