பாராளுமன்ற தேர்தலில் சுதந்திரக் கட்சி ஆட்சியமைக்கும் - எதிர்க்கட்சித் தலைவர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு அதிகூடிய ஆசனங்களைப் பெற்று சுதந்திரக் கட்சியின் அரசாங்கம் ஒன்றை அமைப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
எதிர்காலத்தில் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு செயற்படவேண்டும் என்பது தொடர்பில் எமது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இவ்வார இறுதியில் விசேட கருத்தரங்கொன்றை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.நிமால் சிறிபால டி சில்வா அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
சிறிலங்கா சுதந்திரக்கட்சி புதிய நிர்வாகிகளுடனும் புதுப்பொலிவுடனும் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் எமது கட்சியின் புதிய தேசிய அமைப்பாளரும், பொருளாளரும், தமது கடமைகளை தலைமையகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளனர். இவர்கள் இருவரும் சிரேஷ்ட உறுப்பினர்கள்.
எமது நிறைவேற்றுக்குழுவில் 250க்கும் மேற்பட்ட பிரபலமான தலைவர்கள் உள்ளனர். அவர்களில் ஒரு சிலரை முக்கியப் பதவிகளுக்கு கொண்டுவரும் போது நாம் பாரிய சவால்களை எதிர்நோக்குகின்றோம். எனினும் சிரேஷ்டத்துவம் மற்றும் அனுபவம் என்பவற்றைக் கொண்டு முக்கியமானவர்களை முக்கியப் பதவிகளுக்கு நியமித்துள்ளோம்.
அனைத்து உறுப்பினர்களுக்கும் கட்சியின் உயர்மட்டத்தினராக வர விருப்பம் இருக்கும். அவ்வாறு விருப்பம் இல்லை என்று ஒருபோதும் கூற முடியாது. ஆனால் மிகவும் திறமையானவர்கள் உயர்ந்த பதவிகளுக்கு வருகின்றனர். அதனால் தான் இதனை சவால்மிக்க விடயம் என்று கூறுகின்றேன். மிகவும் சவாலான காலப்பகுதியில் இந்தப் புதிய பதவிகள் நியமிக்கப்பட்டுள்ளன. புதிய நிர்வாகிகள் தொடர்பில் பாரிய விமர்சனங்கள் இல்லை. எனினும் நாங்கள் மக்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்பவேண்டியுள்ளது.
நாங்கள் அடுத்த தேர்தலுக்கான தயார் நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிக்கவேண்டியுள்ளது. எமது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தேர்தலில் போட்டியிட்டு அதிகூடிய ஆசனங்களைப் பெற்று எமது அரசாங்கம் ஒன்றை அமைப்போம்.
எதிர்காலத்தில் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு செயற்படவேண்டும் என்பது தொடர்பில் எமது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இவ்வார இறுதியில் விசேட கருத்தரங்கொன்றை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். நாங்கள் கட்டம் கட்டமாக தேர்தலுக்கு தயாராகின்றோம். அந்த வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்தை அமைத்து நாட்டை அபிவிருத்தி செய்வோம் என்றார்.