Breaking News

அம்மாவை விடுதலை செய்யாவிட்டால் நஞ்சருந்துவேன் - ஜனாதிபதிக்கு விபூசிகா கடிதம்

தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாரியை விடுதலை செய்யாவிட்டால் தான் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக ஜெயக்குமாரியின் மகளான விபூசிகா கடிதமொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிற்கு அனுப்பி வைத்துள்ளார். 

தற்போது சிறுவர் இல்லத்தில் தங்கியுள்ள விபூசிகா, அங்கிருந்தபடி அதிகாரிகளின் ஊடாக இந்த கடிதத்தை மைத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளார்.இந்த கடிதத்தில் ஜெயக்குமாரி கைது செய்யப்பட்டதற்கான நிகழ்வுகள் மற்றும் பின்னணி பற்றி விபூசிகா விபரமாக குறிப்பிட்டுள்ளார். விடுதலைப்புலிகளின் மீளுருவாக்கத்திற்கு உதவியதுடன், கோபி என்பவருக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டும் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தது. ஆனால் அதனை விபூசிகா நிராகரித்துள்ளார்.

தமக்கு கோபி அறிமுகமானவர் அல்லவென அவர் மறுத்துள்ளார். “எனது தாயார் மீது நான் உறுதியளிக்கிறேன். எங்களிற்கு அவரை தெரியாது” என குறிப்பிட்டுள்ளார்.ஜெயக்குமாரி கைது செய்யப்பட்டபோது தாக்கப்பட்டதாகவும், தனது கண்முன்னாலேயே அவரது தலைமயிரை பிடித்து தறதறவென இழுத்து சென்றதாகவும் விபூசிகா குறிப்பிட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட பின்னர் ஜெயக்குமாரிக்கு கைவிலங்கிட்டு, கதைப்பதற்காக அதிர்ச்சியூட்டப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். உண்மையை கூறுமாறும் இல்லாவிட்டால் மின்சார சுவிட்சை போடப் போவதாக விசாரணையாளர்கள் மிரட்டியதாக குறிப்பிட்டுள்ளார். உண்மையை சொல்லிவிட்டால் தன்னை கொன்றுவிடப்போவதாக தாயார் மிரட்டப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

“தயவு செய்து உங்கள் பிள்ளையாக  என்னை நினையுங்கள். எனது தாயார் மிக அப்பாவி. அவரை விடுதலை செய்யுங்கள். அவர் எந்தக்குற்றமும் செய்யவில்லை. தடுத்து வைக்கப்பட்டுள்ள எனது மூன்றாவது சகோதரரரையும் விடுதலை செய்யுங்கள். அம்மாவை பார்க்காவிட்டால் நான் நஞ்சு குடித்து செத்துவிடுவேன்” என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.