Breaking News

கண்ணீர் வெள்ளத்தில் ஜெயக்குமாரி- விபூசிகா சந்திப்பு! சிறைச்சாலையே உருக்கம்

விடுதலைப்புலிகளை மீள உருவாக்க ஒத்துழைத்தார் என்ற குற்றச்சாட்டில் கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாரியை, அவரது மகள் விபூசிகா நேற்று முன்தினம் சந்தித்து பேசியுள்ளார்.

காலை தொடக்கம் மாலைவரை நீடித்த பெரும் இழுபறியின் பின்னரே தாயாரை சந்திக்க விபூசிகாவிற்கு அனுமதி கிடைத்துள்ளது. அரைமணித்தியாலம் நடந்த இந்த சந்திப்பு பெரும் உணர்ச்சிகரமானதாக அமைந்தது.

நீதிமன்ற அனுமதியையடுத்து நேற்று முன்தினம் காலை 9 மணிக்கே விபூசிகா குழுவினர் மகசின் சிறைச்சாலைக்கு சென்றிருந்தார்கள். எனினும், நீதிமன்ற உத்தரவு தமக்கு கிடைக்கவில்லையென கூறி, சந்திப்பிற்கு அனுமதி கொடுக்க சிறைச்சாலை அதிகாரிகள் அனுமதி மறுத்து விட்டனர். தன்னிடமிருந்த நீதிமன்ற அனுமதியை காண்பித்து, சந்திப்பிற்கு அனுமதி கோரி விபூசிகா அதிகாரிகளிடம் கெஞ்சினார். 

ஒரு கட்டத்தில் அவர் கண்ணீர்விட்டும் அழத் தொடங்கி விட்டார். அது அங்கிருந்த அதிகாரிகளையும் நிலைகுலைய வைத்தது. எனினும். நீதிமன்ற அனுமதி தமக்கு கிடைக்காமல் சந்திப்பிற்கு அனுமதிக்க முடியாதென அவர்கள் கூறினார்கள்.இதனால் அங்கு நீண்ட இழுபறி நிலவியது. பின்னர் மாலை 4மணியளவில் உரிய அனுமதிகளை சிறைச்சாலை அதிகாரிகள் பெற்று, சந்திப்பிற்கு அனுமதித்தனர்.

நீண்டநாளின் பின்னர் சந்தித்ததால் தாயும், மகளும் கட்டியணைத்து நீண்டநேரம் கண்ணீர்விட்டு அழுதார்கள். பேசிக்கொள்ளாமல் இருவரும் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்தது அங்கு நின்றவர்களையும் உருக வைத்தது. இருவரையும் சமாதானப்படுத்தி, பேச வைக்க அதிகாரிகள் பெரும் சிரமப்பட்டனர்.

சிறைச்சாலையில் பல சிக்கல்களை சந்திப்பதாக விபூசிகாவுடன் சென்ற வழக்கறிஞர்களிடம் ஜெயக்குமாரி கூறினார். சிறைச்சாலைக்குள் எலிகளின் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. ஜெயக்குமாரியின் உடலிலும் பல இடங்களில் எலிக்கடி காயங்கள் உள்ளன.

ஆனால் முன்னர் பூசாவில் தடுத்து வைக்கப்பட்டபோது அனுபவித்த சித்திரவதைகளை தற்போது மகசீனில் அனுபவிப்பதில்லை என்று நிம்மதிப்பெருமூச்சும் விட்டார்.இதேவேளை, ஜெயக்குமாரி சிறையில் இருந்த சமயத்தில் விபூசிகா பூப்படைந்திருந்தார். இவரது பூப்பனித நீராட்டு விழா எதிர்வரும் மார்ச் 6ம் திகதி நடக்கவுள்ளது. வரும் 24ம் திகதி ஜெயக்குமாரியின் வழக்கு விசாரணை நடக்கவுள்ள நிலையில், பூப்பனித நீராட்டு விழாவில் பங்கேற்க அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்படவுள்ளது.