வெகு விரைவில் மருதங்கேணியில் இருந்து யாழ்ப்பாண மக்களுக்கு குடிநீர் - வடக்கு முதல்வர்
வெகு விரைவில் மருதங்கேணியில் இருந்து யாழ்ப்பாண மக்களுக்கு குடிநீர் வழங்கப்படவுள்ளது என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வவுனியா பொது வைத்தியசாலையில் 37 லட்சம் ரூபா பெறுமதியில் தீயாகி அறக்கட்டளை அமைப்பால் உருவாக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
சுமார் 50 அல்லது 60 வருடங்களுக்கு முன்னர் ஒரு ஆங்கில சஞ்சிகையில் வாசித்த ஞாபகம் இன்னுமொரு 60 இல்லது 70 வருடங்களில் நீர் பற்றாக்குறை உலகத்தை பாதிக்கும். மாசடைந்த நீரால் மக்களுக்கு மருத்தவ சிகிச்சையளிக்க வேண்டிய கடப்பாட்டை உண்டாக்கும். நீரற்ற நிலை ஒரு புறம். நீரிருந்தும் மாசுற்ற நிலை மறுபுறம் என்று இருந்தது அந்தக் கட்டுரை. மாசடைந்த நீரை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் தான் நாம் இருந்து கொண்டிருக்கிறோம்.
குழாய்களில் வரும் குளோரின் இடப்பட்ட நீரை கொழும்பில் குடித்துப் பழகிவிட்ட என்னைப் போன்றவர்கள் வட மாகாணத்தில் சுமார் 60 அல்லது 70 வருடங்களுக்கு முன் எமது இளமைப் பருவத்தில் வந்த போது இங்கிருந்த கிணறுகளின் நீரை அந்தக் காலத்தில் குடித்த போது புளகாங்கிதமடைந்தோம். அந்த நீர் சுவையாக இருந்தது - நீர் சுத்தமாக இருந்தது. அப்போதைய கிணற்று நீர் சூழல் மாசடையாமல் சுத்தமாக இருந்தது. இப்பொழுது அப்படியல்ல. மாசடைவதை தடுக்க மாபெரும் இயந்திரங்களை நாடவேண்டிய சூழ்நிலை இங்கு உதயமாகியுள்ளது.
அன்று சஞ்சிகையில் குறிப்பிட்ட கருத்து உண்மையில் இங்கு உருவாகியுள்ளது. நிலத்தடி நீர் போதாது என்பது ஒருபுறம் போதும் என்றால் கூட நீர் மாசடைந்திருப்பது இன்னொரு புறம். இதனால் தான் மேலும் மேலும் இயந்திரங்களின் உதவியை நாடவேண்டிய நிலமை உதயமாகியுள்ளது. வெகு விரைவில் யாழ் மக்களுக்கு நீரானது கடலில் இருந்து மருதங்கேணியூடாக பளைக்கு கொண்டு வந்து அங்கிருந்த குழாய்களின் மூலமாக யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்படவிருக்கின்றது.
கடல் நீரை நன்நீராக்க மருதங்கேணியிலும் பளையிலும் இயந்திரங்கள் பொருத்தப்படவிருக்கின்றன. எனவே இயந்திர யுகம் இப்பொழுது அண்டியுள்ளது. அப்பேற்பட்ட இயந்திர யுகத்தை பிரதிபலிப்பதாய் அமைந்துள்ளது இன்றைய திறப்புவிழா. 35 இலட்சம் ரூபா செலவில் 5 வருட பராமரிப்பு பொறுப்பையும் ஏற்று தியாகி அறக்கட்டளை நிறுவனம் இந்த கைகாரியத்தில் ஈடபட்டுள்ளது.
வறுமையுற்ற மாணவர்களின் கல்விக்கு உதவி வளமுள்ள குடிமக்களாக மாற்றவும், நாதியற்று வாழும் குடும்பங்களுக்கு நன்மைகளைப் பெற்றுத்தரவும் ஊனமுற்றோரைப் பராமரித்து உதவிகளைச் செய்யவும் பாதிப்புற்றோரை வைத்தியம் மூலம் வளமுடையவர்களாக மாற்றி வாழ்க்கையில் வளம் பெற ஆவண செய்யவும் வேறுபல கைகரியங்களில் ஈடுபடவும் தியாகி அறக்கட்டளை நிறுவனத்தார் முயன்று வருகின்றனர். அவர்களின் சேவைகளை பாராட்டுகின்றோம்.
வாழ்க்கையில் வசதி படைத்த எமது சகோதர சகோதரிகள் அவர்கள் போன்று மேலும் மேலும் பாதிப்புற்ற எமது மக்களுக்கு உதவ முன்வரவேண்டும் என்று கேட்டுகொள்ளுகின்றேன். இன்றைய காலகட்டத்தில் ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்க்கையை வளமாக்கும் நிறுவனங்கள் மூன்று என்று கூறுவார்கள். அரசாங்கம், தனியார் துறை, மேலும் அரசசார்பற்ற நிறுவனங்கள் என மூன்றும். தியாகி அறக்கட்டளை நிறுவனங்கள் போன்றவை மூன்றாம் வர்க்கத்தை சேர்ந்தவை அரச சார்பற்று, ஆனால் ஆக்கபூர்வமாக கைகரியங்களில் ஈடுபட்டு மக்கள் வாழ்வை மலரச்செய்யும் இந்த அரசார்பற்ற நிறுவனங்கள். மக்கள் சேவைக்காக பாடுபடும் அவர்களை நாங்கள் மனமுவந்து வரவேற்கின்றோம் வாழத்துகின்றோம்.
எமது மக்களின் வருங்காலம் வசந்தமாக உருவாக அவர்கள் மூலமான உதவிகள் தேவையாக உள்ளன. மக்களின் தேவைகளை அறிந்து செய்யும் அவர்களின் சேவைகள் பாராட்டக்குரியன 2015 ஆம் ஆண்டுக்கு அவர்கள் திட்டமிட்டிருக்கும் பல செயல்திட்டங்களில் இதுவும் ஒன்று எங்கள் சேவைகள் மேலும் மேலும் எம்மக்களுக்கு தொடர்ந்து கிடைக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.