Breaking News

இராணுவத்தினரின் கௌரவத்தை கட்டியெழுப்புவதற்கு உள்நாட்டு போர்குற்ற விசாரணையாம் - மங்கள

சிறிலங்கா இராணுவத்தினரின் அபகீர்த்திக் குள்ளாகியுள்ள கௌரவத்தை மீண்டும் கட்டியெழுப்புவதே போர் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உள்நாட்டு நீதிமன்ற கட்டமைப்பைக் கொண்டு மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள விசாரணைகளின் பிரதான நோக்கம் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் விசேட உரையொன்றை ஆற்றிய போதே மங்கள சமரவீர இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்....

'கடந்த மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகளாலும், குழப்பகரமான வெளிவிவகாரக் கொள்கைகள் காரணமாகவும், அரசாங்கத்தினால் உறுதியளிக்கப்பட்ட பொறுப்புக்கூறும் கடப்பாட்டையும் நிறைவேற்றத் தவறியமை காரணமாகவும் உள்நாட்டு விவகாரங்களில் சர்வதேச சமூகம் தலையிடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தனர். அதுமாத்திரமன்றி 2009 ஆம் ஆண்டு மே மாதம் சர்வதேச தரத்திலான போர் குற்ற விசாரணைகள் நடத்தப்படும் என்று ஐ.நா செயலாளர் நாயகம் பேங் கீ மூனுக்கு மஹிந்த வாக்குறுதி அளித்தார்.

ஆனால் அப்போது எதிர்கட்சியில் இருந்த நாம் உள்நாட்டு நீதிமன்ற கட்டமைப்பை பயன்படுத்தி மனித உரிமை மீறல் மற்றும் போர் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தமுடியும் என்று கூறி வந்தோம். அதுமாத்திரமன்றி அவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளிகள் அடையாளம்காணப்படுமாயின் அவர்களுக்கான தண்டனைகளும் உள்நாட்டு நீதிமன்ற கட்டமைப்பின் ஊடாகவே வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திவந்தோம்.

அன்றிருந்த எமது நிலைப்பாடு இன்றும் மாறவில்லை. சிறிலங்காவிற்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நம்பகத்தண்மையுடன் கூடிய உள்நாட்டு கட்டமைப்பின் கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதில் நாம் இன்றும் உறுதியாக இருக்கின்றோம். இதனை ஜனாதிபதி தேர்தலின் போது நாம் முன்வைத்த மாற்றத்துன் இணைவோம் என்ற வேலைத்திட்டத்தின் 93 ஆவது செயற்திட்டமாகவும் மிகத் தெளிவாக குறிப்பிட்டிருந்தோம்.

குறிப்பாக சர்வதேச போர் குற்ற விசாரணை நீதிமன்றத்தை உருவாக்கிய ரோம் உடன்படிக்கையில் சிறிலங்கா கைச்சாத்திடாததால் அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் எழும்போது அவை குறித்து உள்நாட்டு நீதிமன்ற கட்டமைப்பின் கீழ் விசாரிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தூரநோக்குடைய சிந்தனையே காரணம். அதனாலேயே நாட்டிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள போர் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உள்நாட்டு நீதிமன்ற கட்டமைப்பின் ஊடாக சுயாதீன விசாரணையொன்றை மேற்கொள்ள நாம் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றோம். சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து இதனை நாம் செய்யவில்லை. ரோம் பிரகடனத்தில கைச்சாத்திடாததன் காரணமாகவே இதனை நாம் செய்கின்றோம். நாம் எமது நாட்டு மக்களுக்கு பொறுப்புக்கூற கடமைபட்டுள்ளோமே தவிர சர்வதேச சமூகத்திற்கு அல்ல. எவ்வாறாயினும் சர்வதேச சமூகத்துடன் மீண்டும் நெருங்கிய நல்லுறவைப் பேணுவதன் ஊடாக பெற்றுக்கொள்ளக் கூடிய அனைத்து நன்மைகளையும் நாட்டு மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அதற்காகவே நாம் தற்போது போர் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நம்பகத்தன்மையுடன் கூடிய சுயாதீன விசாரணைகளை உள்நாட்டிலுள்ள நீதிமன்றக் கட்டமைப்பின் ஊடாக மேற்கொள்வது குறித்து ஆராய்ந்து வருகின்றோம். இதனை மேற்கொள்ள எமக்கு இன்னும் சிறிது கால அவகாசம் தேவைப்படுகின்றது. இதன்போது எம்மால் சர்வதேச சமூகத்தை ஒட்டுமொத்தமாக புறந்தள்ளிவிட்டு செயற்பட முடியாது. சர்வதேச சமூகத்தை ஒதுக்கிவைப்பதை விடுத்து, அவர்களுடன் இணைந்து செயற்படுவதே எமது திட்டம். இதற்காக சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்படுவதால் அதன் நன்மைகள் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் கிடைக்கும்.

இதற்கமைய நம்பகத்தன்மையுடன் கூடிய விசாரணைகளை நடத்துவதன் ஊடாக எமது இராணுவம் உட்பட அரச படையினர் இழந்த சர்வதேச அங்கீகாரத்தையும், கௌரவத்தையும் மீண்டும் நிலைநாட்டுவதே எமது பிரதான நோக்கம். உலக நாடுகளிலுள்ள எந்தவொரு இராணுவத்திலும் நூற்றுக்கு நூறு வீதம் தவறிழைக்காத மனிதர்கள் இருக்க முடியாது. அதனால் தவறுகள் இழைக்கப்பட்டிருப்பின் அவை குறித்து விசாரணை நடத்துவது தொடர்பில் வெட்கபட வேண்டியதில்லை. 

அதேபோல் அஞ்சவேண்டிய அவசியமும் இல்லை. அதேபோல் விசாரணை நடத்துவது என்பது காட்டிக்கொடுப்பும் இல்லை. பிரேமவதி மனம்பேரி படுகொலை, கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை போன்ற விசாரணைகள் இந்த நாட்டில் ஏற்கனவே இடம்பெற்றுள்ளன. அதனால் இவை எமக்கு புதியதொரு விடையமும் அல்ல. எமது வீரம் நிறைந்த இராணுவத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும், அதேபோல் களங்கம் ஏற்படுத்துவதற்கான கட்டளையை வழங்கிய நபர்களை பகிரங்கப்படுத்துவதன் ஊடாக மீண்டும் அரச படையினரின் கௌரவத்தை கட்டியெழுப்ப முடியும்.

இதனை இலக்காகக் கொண்டே நாம் உள்நாட்டிலுள்ள நீதிமன்றக் கட்டமைப்பின் ஊடாக சுயாதீன விசாரணைகளை நடத்தத் திட்டமிட்டு வருகின்றோம். அதேவேளை இதன் ஊடாக சிங்களம், தமிழ், முஸ்லீம் உட்பட அனைத்து இனங்கள் மற்றும் பௌத்தம், இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்தினர் மத்தியில் மீண்டும் ஒற்றுமையையும், புரிந்துணர்வையும் கட்டியெழுப்ப முடியும் என்றும் கருதுகின்றோம் என்றும் மங்கள சமரவீர இன்றைய தினம் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.