ரணில் மீண்டும் குத்துக்கரணம் – இன்னமும் முடிவு எடுக்கப்படவில்லையாம்
கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் தொடர்பாக இன்னமும் இறுதியான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில், ஜேவிபி தலைவர் அனுரகுமார திசநாயக்க எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.“ இந்த திட்டம் தொடர்பாக ஆராய்வதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உப குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், சீனாவின் நிதியுதவியில் மேற்கொள்ளப்படும் இந்த திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும், எடுத்துப் பரிசீலித்தேன்.அதில், இந்த திட்டம் எல்லாத் தேவைகளையும் நிறைவேற்றும் வகையில் முன்னெடுக்கப்படவில்லை என்று கண்டறிந்தேன். அதன் பின்னரே இதனைக் கவனிக்க குழுவொன்று நியமிக்கப்பட்டது.
அந்தக் குழுவின் அறிக்கை இன்னும் இரண்டு வாரங்களில் கிடைக்கும். அந்த அறிக்கையின் அடிப்படையில் தான் முடிவு எடுக்கப்படும்.அதுகுறித்த விபரங்கள் நாடாளுமன்றத்துடன் பகிர்ந்து கொள்ளப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்த திட்டத்தினால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தில்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், இந்த திட்டத்தை முன்னெடுக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.