தமிழ்த் தேசிய கூட்டமைப்பு புதிய வியூகம் எதற்கானது?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தமிழ் மக்கள் வாக்களிப்பதை வைத்துக் கொண்டு எவரும் தவறான முடிவுகளை எடுத்துவிடக் கூடாது.
தமிழர்களுக்கான மாற்று அரசியல் தலைமை இல்லாததன் காரணமாகவே தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிக்கின்றனர் என்ற உண்மையை ஏற்றுத்தான் ஆக வேண்டும்.
கூட்டமைப்புத் தொடர்பில் தமிழ் மக்கள் பல்வேறு அபிப்பிராயங்களைக் கொண்டுள்ளனர். அந்த அபிப்பிராயங்களில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஒரு சில அரசியல் தலைவர்கள் மீது தமிழ் மக்கள் இனியும் நம்பிக்கை கிடையாது. நிலைமை இதுவாக இருக்கின்ற போதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளின் கரங்களால் ஞானஸ்தானம் பெற்ற அரசியல் கட்சி என்ற அடிப்படையிலும் என்ன இருந்தாலும் தந்தை செல்வநாயகத்தின் வழிப்பாதையில் வந்த தமிழரசுக் கட்சி என்ற நிலைப்பாட்டிலும் தமிழ் மக்களின் வாக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காகிவிடுகிறது. இதை வைத்துக் கொண்டு தமிழர்களின் ஆதரவு எக்காலத்திலும் தமக்கே என்று கூட்டமைப்பு நினைத்திருக்கலாம்.

எனினும் தமிழர்களின் அரசியல் தலைமை ஆரோக்கியமானதல்ல. தமிழ் அரசியல் தலைமைகளின் செயற்பாடுகள் சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன என்ற வலுவான கருத்தை புலம் பெயர் தமிழர்கள் முன்வைத்து வருகின்றனர். புலம் பெயர் தமிழர்களின் இத்தகைய கருத்தியலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆதரித்து வருகின்றது.
நிலைமை இவ்வாறாக இருக்க, தமிழ் மக்கள் மத்தியில் புதிய அரசியல் கட்சிகள் பிறப்பெடுக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன என்பதையும் இவ்விடத்தில் கூறித்தான் ஆகவேண்டும். அதிலும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரனின் பதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரத்து செய்ததன் பின்னணியில், முன்னாள் போராளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் கூட்டமைப்பால் ஓரங்கட்டப்படுகின்றனர் என்ற சந்தேகம் எழுகை பெற்றுள்ளது.
இத்தகையதொரு சூழமைவை கூட்டமைப்பு அதிர்ச்சியோடு உள்வாங்கிக் கொண்டுள்ளது என்பதை இங்கு கூறித்தான் ஆக வேண்டும். அதாவது இதுவரை தமிழ் மக்களின் தனித்துவமான அரசியல் தலைமை தாங்கள் மட்டுமே என்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை தங்களோடு ஒன்றிணையுமாறு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பை விடுத்தவர் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.
உண்மையில் இந்த அழைப்பை விடுக்க வேண்டியவர் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அல்லது கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரனாகவே இருக்க முடியும். எனினும் சம்பந்தருக்கு மிக நெருக்கமானவராக இருக்கக் கூடிய எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்தற்குள் ஏதோ ஒரு முக்கிய அம்சம் அடங்கியிருக்கிறது என்பதை மட்டும் இப்போதைக்குக் கூற முடியும்.
பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியை தமது பக்கத்தில் வைத்துக்கொண்டு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தூக்கி எறிந்த கூட்டமைப்பு; இப்போது மனம் மாறி கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோரின் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை தங்களோடு இணையுமாறு விடுத்த அழைப்புக்குள், கூட்டமைப்பிற்குள் சிலர் தூக்கப்படவுள்ளனர் அல்லது கூட்டமைப்பிற்குச் சவாலாக தமிழ் அரசியல் கட்சிகள் தேர்தலில் குதிப்பதை தடுப்பது என்ற விடயம் உள்ளது என்பதை அறுதியிட்டுக் கூறமுடியும்.