யாழில் சுமந்திரனின் கொடும்பாவி எரிப்பு! (காணொளி,படங்கள் இணைப்பு)
காணாமற்போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பில் உண்மை நிலையை வெளிப்படுத்தக் கோரியும், அரசியல் கைதிகளை விடுவிக்க கோரியும், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கை குறித்த போர்க்குற்ற விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கக் கோரியும் யாழ். பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது.
தொடர்ந்து பேரணியாகச் சென்றவர்கள் ஆஸ்பத்திரி வீதியூடாக காங்கேசன்துறை வீதிக்குச் சென்று தமிழாராய்ச்சி மாநாடு படுகொலை நினைவுச்சின்னம் அமைந்துள்ள இடத்தை அடைந்ததனர். அங்கு பொதுக்கூட்டம் நடத்தினர்.
இதன்போது கூட்டத்தின் மத்தியில் கொடும்பாவி ஒன்று இழுத்துவரப்பட்டது. இழுத்துவந்தவர்கள் அதை திடீரெனத் தீயிட்டுக்கொழுத்தினர். அந்த கொடும்பாவியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் முகம் பொருத்தப்பட்டிருந்தது. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான மகளிர் அமைப்பின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.