Breaking News

மைத்திரியைப் படுகொலை செய்யும் முயற்சி! விசாரணை இல்லையாம்

இலங்கையின் சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் படுகொலை செய்யும் முயற்சி தொடர்பாக கிடைத்த தகவல் குறித்து, விசாரணை செய்யும் திட்டம் ஏதும் இல்லை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த 4ம் திகதி நடந்த சுதந்திர தின அணிவகுப்பில் படுகொலை முயற்சிக்கு வாய்ப்பிருப்பதாக கிடைத்த புலனாய்வுத் தகவலை அடுத்து, பாதுகாப்பு முன்னெற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாக நேற்று தகவல் வெளியானது.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள சட்டம் ஒழுங்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க,

பாதுகாப்புப் படைகளில் உள்ள சிலர், இலங்கை ஜனாதிபதி அல்லது சில அரசாங்கத் தலைவர்களைப் படுகொலை செய்ய தமது ஆயுதங்களைப் பயன்படுத்தலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டிருந்தது.

சுதந்திர தின அணிவகுப்பில்  இராணுவம்,  கடற்படை, விமானப்படை, மற்றும், காவல்துறையைச் சேர்ந்த படையினர் பங்கேற்பது வழக்கம். அதில் பங்கேற்கும் சிலர் இந்தப் படுகொலை முயற்சியில் ஈடுபடலாம் என்ற சந்தேகம் எழுந்திருந்தது.

அவர்களுடைய ஆயுதங்களில் ரவைகள் நிரப்பி தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கலாம் என்று நாம் சந்தேகம் கொண்டோம்.அதையடுத்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.இதுபோன்ற சம்பவங்கள் எகிப்திலும், பாகிஸ்தானிலும் இடம்பெற்றிருந்தன. எனவே, நாம் அதுபற்றி சந்தேகம் கொண்டிருந்தோம், அதனால் தயார் நிலையில் இருந்தோம்.

எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி நிகழ்வு நடந்தேறியது.எனவே, இந்த விவகாரம் தொடர்பாக அரசாங்கம் மேலதிக விசாரணைகள் எதையும் நடத்தாது” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.