அசாத் சாலி இனி நடமாடும் சடலம்! நுகேகொடையில் கம்பன்பில
இன்றைய பொதுக் கூட்டத்துக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை ஒன்று திரட்டி காட்டுங்கள் என அசாத் சாலி சவால் விடுத்தார். ஆனால் இங்கும் ஐந்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து கூடியிருக்கின்றனர்.
இதைப் பார்த்த பிறகும் அவர் அரசியலில் ஈடுபடுவார் என்றால் அவர் நடமாடும் சடலத்துக்கு ஒப்பாவார் என தெரிவித்த மேல்மாகாண சபை உறுப்பினர் உதய கம்பன்பில , மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்க மெதமுலனவுக்கு கேட்கும் வகையில் கூட்டாக குரலெழுப்ப வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து நுகேகொட பகுதியில் பொது கூட்டமொன்று தற்போது நடைபெற்றது. 'மஹிந்தவுடன் நாட்டை வெல்வோம்" எனும் தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளி கட்சிகளினால் குறித்த பொது கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
இன்றைய நாள் வரலாற்று முக்கியத்துவ மிக்க நாளாகும். மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவை பிரதிபலிக்கும் வகையில் மக்கள் கூட்டம் கூடியிருக்கின்றது. எதிர்காலத்தை மாற்றிமைக்கும் சாட்சியாக இன்றைய நாள் காணப்படுகின்றது.
நல்லாட்சி என்ற பெயரில் நாடு பயங்கரவாதத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கின்றது. இந்த அச்சுறுத்தலான நிலைமையினை மாற்றியமைக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கும் வரவேண்டும். இதனைத் தெளிவுப்படுத்தவே இங்கு மக்கள் வெள்ளம் திரண்டுள்ளது.
இன்றைய கூட்டத்திற்கு முடியும் என்றால் 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களை ஒன்று திரட்டி காட்டுங்கள் என அசாத் சாலி சவால் விடுத்தார். இங்கு உள்ள மக்கள் கூடத்தின் எண்ணிக்கையை கணக்கெடுக்க அவருக்கு நான் அழைப்பு விடுத்திருந்தேன். ஆனால் தலைமைத்துவம் அவருக்கு அனுமதி வழங்கியிருக்காது. இந்த மக்கள் கூட்டத்தை பார்த்த பிறகும் அவர் அரசியலில் ஈடுபடுவார் என்றால் ஒரு நடமாடும் சடலத்துக்கு ஒப்பாவார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது அன்னத்திற்கு வாக்களித்தால் விடுதலைப் புலிகளின் இயக்கம் உயிர் பெறும் என அறிவித்தோம். அதன் தரிசனத்தை தற்போது நாம் காண்கின்றோம்.
மேலும் 100 நாள் வேலைத் திட்டம் என்ற பெயரில் அரசாங்கம் நகைச் சுவையான விடயங்களை அரங்கேற்றி வருகின்றது. கொத்தமல்லியின் விலையை குறைத்துள்ளது. இதற்கான காரணம் யாருக்கும் தெரியாது. ஏன் என்றால் சர்வதேசத்துடன் இணைந்து மறைமுகமாக விடுதலை புலி பயங்கரவாதத்தை கட்டியெழுப்பி வருகின்றது இந்த அரசாங்கம். எதிர்காலத்தின் இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளை பார்க்கும் போது நாட்டு மக்களுக்கு காய்ச்சல் பிடிக்கும். எனவே ஒவ்வொரு நாள் காலையிலும் கொத்தமல்லி குடித்தால் காய்ச்சல் குறையும் என்பதற்காகவே கொத்தமல்லியின் விலையை குறைத்துள்ளது.
ரணில் விக்கிரசிங்க புலிகளுக்கு முழு ஆதரவை வழங்கி வருகின்றார். இவருடை இடத்திற்கு மஹிந்த ராஜபக்ஷவை நியமிக்க வேண்டும். இதற்கு மக்கள் முழு ஆதரவை வழங்க வேண்டும்.
இறுதி யுத்தத்தின் போது இனப் படுகொலையே மேற்கொள்ளப்பட்டது என வடக்கு மாகாண சபையில் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனால் கொண்டு வரப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டது. பயங்கரவாதத்தை இல்லாதொழித்த எமது தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சர்வதிகாரி ஹிட்டலருக்கு சமமாக பேசியிருக்கின்றார். மேலும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் ஹிட்டலருக்கு சமமாக வர்ணித்துள்ளார். இவ்வாறான ஒரு நிலையில் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க எவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து நல்லாட்சியை ஏற்படுத்த முடியும்.
புலிகள் நாட்டை சீரழிப்பதற்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் வந்து நாட்டை பாதுகாக்க வேண்டும். இதற்காக அனைவரும் கூட்டாக குரல் கொடுக்க வேண்டும். நாம் எழுப்பும் சத்தம் மெதமுலன பகுதிக்கு கேட்க வேண்டும். மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்க நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றார்.