ரணிலுக்கு எதிராக மகிந்தவை முன்னிறுத்த தயார்
நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைப் பிரதமர் வேட்பாளராக நிறுத்துவதற்கு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகள் இன்று விருப்பம் வெளியிட்டுள்ளன.
கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், மக்கள் ஐக்கிய முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, நவசமசமாசக் கட்சி ஆகியனவே, மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நிறுத்துவதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளன.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைத் தோற்கடிக்க வேறு நம்பிக்கை இல்லை என்றும், மகிந்த ராஜபக்ச ஏற்கனவே 58 இலட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளார் என்றும் இந்தக் கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார,“இது அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான போர் அல்ல, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான போர்.
அவர் அரசியலமைப்புக்கு முரணாகவே, பிரதமராகப் பதவியேற்றிருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.இதற்கிடையே, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைத் தோற்கடிக்கப் போவதாக, எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.