இந்த வாரம் நாடாளுமன்றம் கலைக்கப்படும் - ரணில்
பொதுப் பாதுகாப்பு, அனர்த்த முகாமைத்துவ மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்படாவிடின், நாடாளுமன்றம் இந்தவாரம் கலைக்கப்பட்டுவிடும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க நேற்று தெரிவித்தார்.
ஐ.தே.க தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அமைச்சர் அமரதுங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான விவாதத்தை இந்த வாரம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இந்த விவாதத்துக்கான திகதியை ஒதுக்கித் தருமாறு சபாநாயகரைஇன்று கோரவுள்ளதாக அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களில் 114பேர் இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டுள்ளனர் என்று எதிர்க்கட்சி அறிவித்துள்ளது.
வத்தளை பிரதேசசபை தலைவர் மீது அண்மையில் நடந்த தாக்குதலுடன் அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு தொடர்பு இருப்பதாகவும் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் எதிர்க்கட்சியினர் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுப்பதற்கு புதிய அமைச்சர் தவறிவிட்டதாகவும் கூறியே இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்துள்ளதாகவும் எதிர்க்கட்சி குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறெனினும், தன்மீது எதிர்க்கட்சியினர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை சிறுபிள்ளைத் தனமானது என்று அமைச்சர் ஜோன் அமரதுங்க கூறியுள்ளார்.
இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை தான் வாசித்துப் பார்த்ததாகவும் அதில் தனக்கு எதிராக விரல் நீட்டுவதற்குரிய குற்றச்சாட்டுக்கள் எதுவும் இல்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவம் நடந்தபோது தான் அங்கு இருக்கவும் இல்லை அதில் தொடர்புபட்டிருக்கவும் இல்லை என்றும் அமைச்சர் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
இதனைவிட பாரதூரமான சம்பவங்கள் இந்த நாட்டில் நடந்திருக்கின்றன. அவை பற்றி பேசாமல் இரண்டு தரப்புக்கு இடையில் நடந்த மோதலில் சிறுகாயம் ஏற்பட்ட சம்பவத்துக்காக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்திருக்கிறார்கள்.
எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் மீதான தாக்குதல் குறித்து பொலிஸார் சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்றும் ஜோன் அமரதுங்க மேலும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.