Breaking News

இலங்கை நிறைவேற்ற வேண்டிய பல விடயங்கள் உள்ளன- நிஷா பிஸ்வால்

இலங்கையில் உண்மையாக நிறைவேற்ற வேண்டிய பல விடயங்கள் இன்னமும் இருப்பதாக தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் தெரிவித்துள்ளார்.

தனது இலங்கை பயணம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையை, கொழும்பில் உள்ள அமெரிக்கா தூதரகம் இன்று வெளியிட்டுள்ளது.“வரலாற்றுச் சிறப்பு மிக்க, ஜனவரி 8ம் நாள் அதிபர் தேர்தலில் இலங்கை மக்கள் வெளிப்படுத்திய ஆர்வத்தையும் நம்பிக்கையையும் நானாகவே கண்டுணர்வதற்கு கொழும்புக்கு விஜயம் செய்தமை சிறப்பானதாக அமைந்தது.

அரசாங்கம், சிவில் சமூகம், தனியார் துறை மற்றும் அரசியல் கட்சிகளுடனான சந்திப்பின் போது, இந்த வாக்குறுதியை அனைத்து இலங்கையர்களுக்கும் பிரகாசமான யதார்த்தமாக மாற்றுவதற்கான நம்பிக்கை என்ற ஒத்த செய்தியை அவர்கள் கொண்டிருப்பதை அறிந்து கொண்டேன்.

அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, நகர அபிவிருத்தி அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன ஆகியோருடன் ஆக்கபூர்வமான உரையாடல்களில் நான் கலந்து கொண்டேன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையுடனான எனது உரையாடலின் போது, ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களின் அமைதியான, செழிப்பான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கு நல்லிணக்கம் மற்றும் அரசியல் உள்ளடக்கம் சார்ந்த அர்த்தமுள்ள முன்னேற்றத்துக்கான அவர்களது கண்ணோட்டத்தினையும் தெரிந்து கொண்டேன்.

ஏனைய அரசியல், சிவில் சமூக, மத மற்றும் வர்த்தக பிரமுகர்களையும் சந்திப்பதற்கான சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது.இந்த சந்திப்புக்கள் அனைத்திலும் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் அமெரிக்க-இலங்கை உறவுகள் வளர்வதனை காண்பதற்கான எமது ஆவலை நான் மீண்டும் வலியுறுத்தினேன்.

அதிபர் சிறிசேன, அடைந்த வெற்றிக்காக எனது வாழ்த்தினை பரிமாறிக் கொண்டதுன், அமைதியான, ஜனநாயகமான மற்றும் செழிப்பான இலங்கையின் எதிர்காலத்துக்காக முன்னோக்கிச் செல்லும் விருப்பத்தையும் வெளிப்படுத்தினேன்.உண்மையாக நிறைவேற்ற வேண்டியன இன்னும் நிறையவே உள்ளன.

சவால்களை எதிர்கொள்வதற்கும் இலங்கையர்கள் தமது உண்மையான ஆற்றலை அறிந்து கொள்ள உதவுவதற்கும் இலங்கை மக்களுடன் இணைந்து செயற்படுவதற்க அமெரிக்கா எதிர்பார்த்துள்ளது.” என்று அதில் கூறப்பட்டுள்ளது.