சுன்னாகம் குடிநீர் பிரச்சினை! கொழும்பில் ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)
சுன்னாகம், தெல்லிப்பழைப் பிரதேசங்களில் கிணற்றுதண்ணீர் மாசடைந்த பிரச்சினைகுறித்து பல்வேறு தரப்பினருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று காலை 9 மணிக்கு கொழும்பு, வெள்ளவத்தையில் ஆரம்பமாகியது.
சமூக நலனுக்காக ஒருங்கிணைந்த இளைஞர்களின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீரை மாத்திரமே ‘குடிநீர்’ உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய தேவைகளுக்குமான நீராதாரமாக கொண்டுள்ள யாழ். குடாநாட்டின் நீர் வளத்தை மாசுபடாது பாதுகாப்பது அவசியமானது என்று கோரியே இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நிலத்தடி நீரை விரைவாக சுத்தப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இல்லாது போனால், நிலத்தடி நீர் மாசடைதலின் வேகம் இன்னமும் அதிகரிக்கலாம் என்று சூழலியலாளர்களும் துறைசார் நிபுணர்களும் எச்சரித்துள்ளனர்.
‘குடிநீருக்கான எமது உரிமையைப் பாதுகாப்போம்’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்றுவரும் இந்தப் போராட்டம், நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள மக்களுக்கு இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை உணரவைப்பதையும், மத்திய அரசாங்கம், வடக்கு மாகாண சபை, துறைசார் நிபுணர்கள், சூழலியலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்புக்களை இந்தப் பிரச்சினையில் விரைவான நடவடிக்கைக்கு வலியுறுத்துவதாகவும் நடத்தப்படுகிறது என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.