Breaking News

புலிகளின் சொத்துக்கள் என்னிடமில்லை! பதறும் கே.பி

விடுதலைப்புலிகளின் முன்னாள் சர்வதேசப்பொறுப்பாளர் கே.பி என்றழைக்கப்பட்ட குமரன் பத்மநாபன் தொடர்பில் அண்மையில் சர்ச்சைகள் கிளம்பியிருந்தன. 

அவரிடமிருந்த பெருமளவான சொத்துக்கள் மகிந்த குழுவால் சுருட்டப்பட்டுவிட்டது, அவரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், ஜே.வி.பியும் இது தொடர்பில் நீதிமன்றத்தை நாடியுள்ளது. இவ்வாறான நிலையில், இவை எதுபற்றியும் வாய்திறக்காமல் இருந்த கே.பியை எமது செய்திச்சேவை தொடர்பு கொண்டு வினவியபோது அவர் முக்கியமான சில விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.


சரணடைந்த போராளிகள் புனர்வாழ்விற்குட்படுத்தப்படும்போது, கே.பி சுதந்திரமாக உள்ளாரே என கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கேட்டபோது, “மலேசியாவில் வைத்து நான் கைதாகி 24 மணித்தியாலங்கள் அங்கு தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டேன். பின்னர் எயார்லங்கா விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்டேன். 

அன்று முதல் பாதுகாப்பு பிரிவினரின் தீவிர கண்காணிப்பிலேயே வாழ்ந்து வருகிறேன். சுமார் 40 பாதுகாப்பு பிரிவினர் என்னை திவிரமாக கண்காணித்து வருகிறார்கள். நான் எதையும் சுதந்திரமாக செய்ய முடியாமல் உள்ளது. எனது குடும்ப உறுப்பினர்களுடன் கூட சுதந்திரமாக பேச முடியாமல் உள்ளது” என்றார்.

புலிகளின் சொத்துக்களிற்கு என்ன நடந்ததென கேட்டபோது, “நான் 2002 ஆம் ஆண்டிலிருந்து அந்த அமைப்பிலிருந்து ஒதுங்கியே வசித்து வருகிறேன். கைதாகும்போது புலிகளின் சொத்துக்களோ, நிதியோ என்னிடமிருக்கவில்லை. நான் கொடுத்த தகவல்களை வைத்து கப்பல்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை” என்றார்.




உங்களிற்கு மட்டும் ஏன் விசேட சலுகை, எப்படி புனர்வாழ்விற்கு உட்படாமல் தப்பினீர்கள் என கேட்டபோது, “அதைப்பற்றி நீங்கள் மகிந்த ராஜபக்சவிடம்தான் கேட்க வேண்டும்” என்றார்.