போர்க்குற்ற அறிக்கை விவகாரம்! கூட்டமைப்பிற்குள் வேறுபட்ட கருத்துக்கள்
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான போர்க்குற்றச்சாட்டு விசாரணை அறிக்கை தள்ளிவைக்கப்பட்டுள்ளமைக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு இருவேறுவிதமான பிரதிபலிப்புக்களை வெளியிட்டு வருகிறது.
தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஒரு தரப்பினர் கடுமையான அதிர்ச்சியும், எதிர்ப்பும் வெளியிட்டு வர, இன்னொரு தரப்பினர் மனிதஉரிமைகள் பேரவையின் முடிவை ஆதரிக்கும் விதத்தில் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
அண்மைநாட்களாக கருத்துரீதியில் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்குள் இரண்டு அணிகள் உருவாகி வருவது தொடர்பில் எமது செய்தித்தளத்தில் தொடர்ந்து குறிப்பிட்டுவரும் விவகாரத்தை மேலும் உறுதிசெய்வதாக இந்த நிலை அமைந்துள்ளது.
மைத்திரி அரசுடன் மிக நெருக்கத்தை பேணாமல், சற்ற எச்சரிக்கையுடன் தள்ளி நிற்கும் போக்கை கடைப்பிடித்து வரும் சுரேஷ் பிரேமச்சந்திரன், சித்தார்த்தன், வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் கூட்டமைப்பின் இரண்டாம் மட்ட தலைவர்கள் ஆரம்பம் முதலே புதிய அரசுடன் மிகவும் நெருக்கத்தை பேணவில்லை.
மாறாக, கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரி வெளிப்படையான நெருக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். புதிய அரசுடன் இந்த இருவரும் நெருக்கத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், வடக்கு மாகாணசபை இனஅழிப்பு பிரேரணையை நிறைவேற்றியது. இந்த பிரேரணையை தள்ளிவைக்குமாறு இறுதிவரை சுமந்திரன் வடக்கு முதல்வரிடம் கோரிக்கை விடுத்தபடியிருந்த விடயமும் தற்போது வெளியாகியுள்ளது.
அண்மைக்காலமாக கூட்டமைப்பின் அரசியல முடிவுகள் தொடர்பில் இருதரப்பும் வேறுபட்ட கருத்துக்களை பகிரங்கத்தில் தெரிவித்து வருகின்றனர். ஒருதரப்பின் நிலைப்பாட்டை மறுதரப்பு விமர்சனம் செய்வதும் அடிக்கடி நடக்கின்றது.
இந்தநிலையில், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கை போர்க்குற்றச்சாட்டு அறிக்கை தள்ளிவைக்கப்பட்ட விவகாரத்திலும் இருதரப்பும் வேறுபட்ட கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த விடயத்திற்கு தமது கடுமையான கண்டனத்தை தெரிவிப்பதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் உத்தியொகபூர்வ பேச்சாளர் சுரேஷ் பிரேச்சந்திரன் தெரிவித்துள்ளார். “பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிற்கு நீதிகடைப்பதை இது தாமதிக்க செய்கிறது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. இது பற்றிய எமது அதிருப்தியை சம்பந்தப்பட்ட சகல தரப்பினருக்கும் தெரியப்படுத்தவோம். அத்துடன், மனிதஉரிமைகள் பேரவையுடனான அவசர கலந்துரையாடல் ஒன்றிற்கு சந்தர்ப்பம் கோரவுள்ளோம்” என்றார்.
வடக்கு முதல்வர் விக்னேஸ்வரனும் இந்த விடயத்தில் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். குறிப்பிட்டபடி மார்ச் மாதத்தில் அறிக்கையை வெளியிட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். “அறிக்கை எந்தவித காலதாமதமுமின்றி மார்ச் மாதம் 28ம் திகதிக்கு மேசைக்கு வர வேண்டும். சொன்னபடி அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும். தேவையெனில் அதன் உள்ளடக்கத்தை ஆறுமாதங்கள் தாமதித்து வெளியிடட்டும்.
அறிக்கை சமர்ப்பிப்பது தாமதமானால் காலக்கிரமத்தில் அது கைவிடப்படக்கூடிய அபாயமும் உள்ளது. செப்ரெம்பரில் வெளியிடப்படும் என்கிறார்கள். அதற்கு யார் உத்தரவாதம் தருகிறார்கள்?” என்றும் கேள்வியெழுப்பினார்.
ஆனால் மறுவளமாக சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் இந்த முடிவை ஆதரித்துள்ளனர். “தாமதிப்பதை நினைத்து கவலையடைய ஒன்றுமில்லை. தாமதிப்பது புதிய வாய்ப்புக்களை தரும். இதுவரை சாட்சி வழங்காதவர்கள் இந்த இடைவெளியில் சாட்சி வழங்கலாம். இதனால் மேலும் புதிய சாட்சியங்கள் வருவது நல்லதுதானே” என்றுள்ளார்.
கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் இதேவிதமான கருத்தையே வெளியிட்டுள்ளார்.