Breaking News

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் – மல்வத்தை பீடாதிபதி

வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மல்வத்தை பீடத்தின் மகாநாயக்க தேரர் வண.திப்பொட்டுவாவே சிறி சித்தார்த்த சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார்.

இலங்கை பாதுகாப்புச் செயலர் பி.எம்.யு.டி.பஸ்நாயக்க நேற்று கண்டியில் தலதா மாளிகையில் வழிபாடு செய்த பின்னர், அஸ்கிரிய, மல்வத்தை பீடங்களின் மகாநாயக்க தேரர்களையும், ராமங்ன்ன நிக்காயவின் பீடாதிபதியையும் சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டார்.

இதன்போது கருத்து வெளியிட்ட மல்வத்தை பீடத்தின் மகாநாயக்க தேரர், “முன்னர் போர் நடந்த வடக்கு, கிழக்குப் பகுதி மக்களுக்கு பிரச்சினைகள் உள்ளன.அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.” என்று கேட்டுக் கொண்டார்.

அதேவேளை, வெளிநாடுகளில் பிரிவினைச் செயற்பாடுகள் நாட்டின் அமைதிக்கு ஆபத்தாக உள்ளதாக, அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர், வண. உடுகம சிறி புத்தரகித்த தேரர்,  பாதுகாப்புச் செயலரிடம் தெரிவித்துள்ளார்.எந்தவொரு கட்டத்திலும், வடக்கு, கிழக்கின் பாதுகாப்பு தொடர்பாக சமரசத்துக்கு இடமளிக்கப்படக் கூடாது என்றும் அஸ்கிரிய பீடாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு இலங்கை பாதுகாப்புச் செயலர், வடக்கு, கிழக்கில் பாதுகாப்பைக் குறைக்கும் எந்த திட்டமும் இல்லை என்று அஸ்கிரிய பீடாதிபதியிடம், உறுதியளித்துள்ளார்.