மைத்திரி அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதிக்கிறது ஜே.வி.பி!
100 நாள் வேலைத்திட்டத்தில் 50 நாட்கள் நிறைவடைந்து வருகின்ற நிலையில், மைத்திரி அரசு ஊழல், மோசடிகளுடன் தொடர்புடையவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இந்த விடயத்தில் அரசின் அலட்சியப்போக்கைக் கண்டித்து எதிர்வரும் 26ஆம் திகதி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தப் போவதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அக்கட்சியின் பிரசார செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினரதும், சகாக்களினதும் ஊழல், மோசடிகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால தலைமையிலான இந்த அரசு விசாரணைகளை நடத்துவதாகத் தெரிவித்தபோதிலும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. 100 நாள் வேலைத்திட்டத்தில் 50 நாட்கள் முடிவடையப் போகின்றன. எனினும், ஊழல், மோசடிகளுடன் தொடர்புடையவர்கள் இன்னும் சுதந்திரமாகவே வெளியில் சுற்றுகின்றனர்.
இவர்கள் தொடர்பில் அனைத்து ஆதாரங்களுடனும் நாங்கள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் கடந்த ஜனவரி 13ஆம் திகதி முறைப்பாடு செய்தோம். நாங்கள் புதிய அரசு அமைத்து 5 நாட்களுக்குள் எமது வேலையை ஆரம்பித்தோம். ஆனால், இது தொடர்பில் இன்னும் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவில்லை. அதுமட்டுமல்லாது நாங்கள் மேல் முறையீட்டு நீதிமன்றத்திலும் வழக்குப் பதிவுசெய்துள்ளோம்.
கே.பி. இன்னும் கிளிநொச்சியில் சுதந்திரமாக உள்ளார். யோஷித்த ராஜபக்ஷ , பஸில் ராஜபக்ஷ ஆகியோர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளனர். இந்த அரசு இனியும் தாமதமின்றி இவை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும்.
இந்நாட்டில் இலஞ்ச ஊழல்களை நிறுத்த வேண்டுமாயின், குற்றவாளிகள் தராதரம் பார்க்காது தண்டிக்கப்பட வேண்டும். விசாரணைகளுக்கு மேலும் தாமதம் ஏற்படுமாயின் அரசைப் பலவந்தப்படுத்தும் வகையில் நாங்கள் வீதியில் மீண்டும் இறங்கிப் போராட்டங்களை முன்னெடுப்போம். இதன் முதல்கட்டமாக எதிர்வரும் 26 ஆம் திகதி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று நடத்தத் திட்டமிட்டுள்ளோம்” – என்றார்.