கட்டுப்பாடுகளுடன் பணியாற்ற முடியாது - உயர்கல்வி அமைச்சர்
நாட்டுக்காக நற்பணிகளில் ஈடுபட ஆசை உண்டு. அதற்காக அடிப்படையற்ற கட்டுப் பாடுகளுடன் அத்தகைய பணிகளில் ஈடுபட முடியாது என உயர்கல்வி அமைச்சர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்தார். கண்டியில் நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவியாக நியமிக்கப்பட்டிருந்த பேராசிரியர் க்ஷனிகா ஹிரும்புரேகம பதவி நீக்கம் தொடர்பாக ஏற்பட்டுள்ள சர்ச்சை தொடர்பாக ஊடக வியலாளர் ஒருவர் கேட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது-
நான் வெளிநாட்டில் இருந்த போது அவருக்கான பதவி நீக்க உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. இவ் விடயமாக எனது ஆலோசனைகள் பெறப்பட வில்லை. இதற்கான அடிப்படை விடயம் என்ன என நான் சம்பந்தப்பட்டவர்களிடம் வினவிய போது அரசியல் காரணங்கள் முன்வைக்கப்பட்டன.
அப்படியாயின் பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு அரசியல் உரிமைகள் நீக்கப்பட வேண்டும். அரசியல் உரிமைகள் இல்லாத நிலையில் அரசியலில் ஈடுபட்டால் அது தவறுதான். அப்படியான ஒரு நிலைமை இல்லாத போது அவரை பதவி நீக்க தகுந்த காரணம் ஏதும் இருக்க வேண்டும்.
நாட்டுக்காக நிறையச் செய்ய வேண்டியுள்ளது. அதுவும் பாரிய சிரமத்திற்கு மத்தியிலே மேற்கொள்ள வேண்டியுள்ளது. நாட்டில் ஒரு நல்லாட்சி ஏற்பட வேண்டுமென்றே மக்கள் வாக்களித்தனர். எனவே நல்லாட்சி ஏற்பட வேண்டுமாயின் சிரமங்களைத் தாண்டித்தான் செல்லவேண்டும்.
மேற்படி பிரச்சினை தொடர்பாக நான் மூன்று மாற்று வழிகளை முன்வைத்துள்ளேன். அது உயர் மட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் ஏதாவது ஒன்று பின்பற்றப்பட்டால் என்னால் தொடர்ந்து இயங்க முடியும். அல்லாத பட்சத்தில் நான் தொடர்ந்து இருக்கு முடியுமா என்பது பற்றி கூற முடியாதுள்ளது. அது இன்றோ நாளையோ நடக்கலாம்.
நாட்டுக்காக நற்பணிகளில் ஈடுபட ஆசை உண்டு. அதற்காக அடிப்படையற்ற கட்டுப் பாடுகளுடன் ஈடுபட முடியாது. நான் அல்லாத வேறு எவரைக் கொண்டாவது இப்பணியை செவ்வனே செய்ய முடியுமாயின் அது பற்றி நான் தடையாக இருக்க மாட்டேன்.