Breaking News

வீரவன்ஸவின் மனைவிக்கு விளக்கமறியல்!

முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் பாரியாரான சஷி வீரவன்சவை எதிர்வரும் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது.

போலியான கடவுச் சீட்டுகள் மற்றும் தேசிய அடையாள அட்டைகள் உள்ளிட்ட ஆவணங்களை தயாரித்த குற்றச்சாட்டின் பேரில் அவர் காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.

கொழும்பின் புறநகர் பகுதியான மாலபேயில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சஷி வீரவன்ச நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் இவர் மீதான வழக்கை விசாரணை செய்த கடுவலை மாஜிஸ்திரேட் நீதிபதி தம்மிக்க ஹேமபால, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் சஷி வீரவன்சவை சிறைச்சாலை அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் எதிர்வரும் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.