Breaking News

சர்வதேச விசாரணை! கூட்டமைப்பின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை - மாவை

ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையகத்தின் ஆய்வு அறிக்கையை பிற்போடுவதனை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒருபோதும் ஆமோதிக்காது என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதம் கூட்டமைப்பின் குழு ஜெனீவா சென்று இலங்கை மீதான சர்வதேச விசாரணையினை கோரும் எனவும் அவர் கூறியுள்ளார்.இலங்கையில் ஜனாதிபதி மாற்றம் இடம்பெற்றாலும் இந்த மாற்றத்துடன் தமிழர்களுக்கு அனைத்தும் கிடைத்துவிட்டதாக அர்த்தம் கிடையாது.எனவே நாம் தொடர்ந்தும் சர்வதேச விசாரணையினை கேட்டக் வேண்டிய தேவையுடன் இருக்கின்றோம்.

மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா மனிதவுரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கை மீதான அறிக்கையிடல் விசாரணைகளில் சர்வதேச விசாரணைகளை வலியுறுத்தி வருகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எதிர்வரும் மார்ச் மாதம் எவ்வாறான நகர்வினை மேற்கொள்ளவுள்ளது என்பது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

தமிழ்த் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் சர்வதேச விசாரணை வேண்டும் என்பதனை நாம் தொடர்ந்தும் கேட்கிறோம்.அந்த நிலைப்பாட்டில் கூட்டமைப்பு மாற்றத்தை உருவாக்கியிருக்கின்றது என யாரும் கூறினால் அதற்கு, அவ்வாறில்லை என்பதே பதிலாக இருக்க முடியும் என நாம் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கிறோம்.

இந்தவகையில் குறித்த விசாரணைக்கு எமக்கு ஒத்துழைப்பு வழங்கிய நாடுகளும் குறித்த விசாரணையினை கொண்டுவருவதற்கு முன்னின்று உழைத்த நாடுகளும் இப்போதும் தங்கள் உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருப்பதுடன், அதனை தாம் முன்னெடுக்கப் போவதாகவும் எமக்கு கூறியிருக்கின்றார்கள்.இந்நிலையில் அதற்கான ஒழுங்கமைப்புக்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்றார்.