Breaking News

சம்பந்தன் ஐயா கட்டை விரலை வெட்டித்தருமாறு கேட்டாராம் -ரவூப் ஹக்கீம்

தமிழ், முஸ்லிம் உறவு குறித்து காத்­தி­ர­மான கருத்­துக்­களை
முன்­வைத்து வந்த சம்­பந்தன் ஐயா இப்­பொ­ழுது காட்­ட­மான விம­ர்­சன ரீதி­யான கருத்­துக்­களை கூறி­வ­ரு­வது ஏன்? இந்த விரிசல் வேண்­டு­மென்றே அர­சியல் கார­ணங்­க­ளுக்­காக ஏற்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றதா? அடுத்து வரும் தேர்­தலை மைய­மாகக் கொண்டு தமிழ் மக்­களின் வாக்­கு­களை இலக்கு வைத்து இவ்­வாறு பேசப்­ப­டு­கின்­றதா? இவ்­வாறு கேள்வி எழுப்­பினார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் நகர அபி­வி­ருத்தி நீர்­வ­ழங்கல் வடி­கா­ல­மைப்பு அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம்.

எதிர்­வரும் 28ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள முல்­லைத்­தீவு மாவட்­டத்தின் கரை­து­றைப்­பற்று பிர­தேச சபைத் தேர்­தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் மரச்­சின்­னத்தில் போட்­டி­யிடும் வேட்­பா­ளர்­களை ஆத­ரித்து இடம்­பெ­யர்ந்த வாக்­கா­ளர்கள் மத்­தியில் ஆலங்­குடா 'பீ' (B) முகாம் என்ற கிரா­மத்தில் கடந்த திங்­கட்­கி­ழமை மாலை நடை­பெற்ற பிர­சா­ரக்­கூட்­டத்தில் உரை­யாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். 

வடமேல் மாகாண சபை உறுப்­பினர் எச்.எம்.நியாஸ், முன்னாள் முஸ்லிம் காங்­கிரஸ் உச்­ச­பீட உறுப்­பினர் நஜாத் உட்­பட கரை­து­றைப்­பற்று பிர­தேச சபைத் தேர்­தலில் போட்­டி­யிடும் கட்­சியின் வேட்­பா­ளர்­களும் பொது மக்­களும் இக்­கூட்­டத்தில் கலந்­து­கொண்­டனர். முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரி­வித்­த­தா­வது, சம­கா­லத்தில் சுவா­ரஷ்­ய­மான சில விஷ­யங்கள் நடந்து கொண்­டி­ருக்­கின்­றன. 

வட-­கி­ழக்கில் வாழும் தமிழ் பேசும் சமூ­கத்­தி­னர்­க­ளான முஸ்­லிம்கள் பற்­றிய பிரஸ்­தாபம் குறித்து எமது மக்கள் மிகவும் ஆதங்­கத்­தோடு இருக்­கின்­றனர். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இந்­தி­யாவிற்கு முத­லா­வது உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்­டி­ருக்­கின்றார். இன்று அவரும் இந்­தியப் பிர­தமர் மோடியும் சந்­தித்­துக்­கொள்­கின்­றார்கள். 

இவ்­வா­றான சூழ்­நி­லையில் பல­வி­த­மான நம்­பிக்­கைகள் மக்கள் மத்­தியில் துளிர்­விட ஆரம்­பித்­தி­ருக்­கின்­றது. இரண்டு நாடு­க­ளுக்­கு­மி­டை­யி­லான இரு தரப்பு பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வு மாத்­தி­ர­மல்ல இலங்­கையில் வசிக்கும் தமிழ் பேசும் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு ஆக்­கப்­பூர்­வ­மான தீர்வு காண்­பது குறித்த விட­யங்­களும் பேசப்­ப­டலாம் என நம்­பப்­ப­டு­கின்­றது. 

ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் ஓர் அர­சியல் இயக்­க­மென்ற அடிப்­ப­டையில் அண்­மைக்­கா­ல­மாக நடந்து வரு­கின்ற சில விட­யங்­களைப் பற்றி எங்­க­ளுக்கே வியப்­பாக இருக்­கின்­றது. எதற்­காக இவ்­வாறு நாங்கள் விமர்­சிக்­கப்­ப­டு­கின்றோம். ஏன் தமிழ்த் தேசி­யத் ­த­லை­மைகள் கொஞ்சம் தாறு­மா­றாகக் காட்­ட­மாக பேசி வரு­கின்­றன என்­பதில் எனக்கே இன்னும் சரி­யான தெளிவு இல்லை. 

இவ்­வ­ளவு நட்­பு­ற­வோடு நாங்கள் நடந்­து­கொள்­கின்ற பொழுது மிகவும் பக்­கு­வ­மாக வார்த்­தை­களை பயன்­ப­டுத்­து­கின்ற போது தமிழ்த் தேசியத் தலை­மை­க­ளி­ட­மி­ருந்து வரு­கின்ற வார்த்தைப் பிர­யோ­கங்கள் ஏதோவோர் ஆற்­றா­மையின் கார­ண­மாக காட்­ட­மாக இருக்­கின்­றன என்ற கவலை எங்­க­ளுக்கு உள்­ளது. அவை ஆற்­றா­மையின் வெளிப்­பா­டாக இருக்­கலாம் என எங்­களை நாங்­களே சமா­ளித்து கொள்­கின்றோம். 

ஏன் இந்த ஆற்­றாமை ஏற்­பட்­டது என்­ப­தற்கு அவர்­க­ளி­டத்­தி­லேதான் விளக்கம் கோர வேண்டும். குறிப்­பாக அண்­மையில் எழுந்த கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் விவ­கா­ரத்தில் முஸ்லிம் காங்­கிரஸ் அந்த முத­ல­மைச்சர் பத­வியை பெற்­றி­ருக்­கின்­றது என்ற நிலையில் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் ஒரு கூட்­டுக்­கட்­சியின் தலை­வ­ரான நண்பர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் காட்­ட­மாக ஒன்றை சொல்­லி­யி­ருப்­பதை இன்றும் கூட நான் பார்த்தேன். 

அதற்கு முன்னர் அண்ணன் சம்­பந்தன் ஐயா கூட வழக்­க­மாக அவ­ரது உரை­களில் காணப்­படும் தமிழ் முஸ்லிம் உற­வு­கு­றித்த சம்­ப­வங்­களை விடுத்து மிக காட்­ட­மான விமர்­சன ரீதி­யான கருத்­துக்­களை முன்­வைப்பது குறித்து நாம் வேத­னை­ய­டை­கின்றோம். இந்த விரிசல் வேண்­டு ­மென்றே ஏதா­வது அர­சியல் கார­ணங்­க­ளுக்­காக ஏற்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றதா? அடுத்து வரும் தேர்­தலை மைய­மாக வைத்து தமிழ் மக்­களின் வாக்­கு­களை இலக்கு வைத்து இவ்­வாறு பேசு­கின்­ற­னரா? என்று யோசித்­தாலும் கூட அவ்­வாறு அவர்கள் நடந்­து­கொள்­வ­தனால் என்ன நன்மை கிடைக்­கப்­போ­கின்­றது என்று எங்­க­ளுக்குப் புரி­ய­வில்லை. 

முத­ல­மைச்சர் விவ­கா­ரத்தில் இவ்­வ­ளவு மன உளைச்சல் ஏற்­பட்டு விட்­டதா முத­ல­மைச்சர் விவ­கா­ரத்தில் நாங்கள் விட்­டுக்­கொ­டுக்க விரும்­ப­வில்லை என்­பதை நான் மிகத்­தெ­ளி­வாகச் சொல்ல வேண்டும். சில நியா­யங்­களை நாங்கள் பேச வேண்டும். வெறும் அறிக்கை விடு­வதில் பய­னில்லை. அவர்கள் விடும் அறிக்­கை­க­ளுக்கு மாற்று அறிக்கை விடு­வதைக் கூட நான் தவிர்த்துக் கொண்டு வரு­கின்றேன். 

முல்­லைத்­தீவு கரை­து­றைப்­பற்று பிர­தேசசபை தேர்தல் நடை­பெ­ற­வுள்ள நிலையில் அந்த மண்ணைச் சேர்ந்த உங்கள் மத்­தியில் நான் இதனைக் கூற வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­போடு முட்டி மோதிக் கொண்டு அர­சியல் செய்ய நாங்கள் விரும்­ப­வில்லை. முஸ்லிம் காங்­கிரஸ் தலைமை கிழக்கு மாகா­ணத்­திலும் கண்டி கொழும்பு மாவட்­டங்­க­ளில் வாழும் முஸ்­லிம் ­க­ளுக்­காக மட்டும் பேசு­கின்ற தலை­மை­யொன்­றல்ல. 

முல்­லைத்­தீவு போன்ற பிர­தேசங்­களில் வாழும் மக்­க­ளையும் மனதில் கொண்­டுதான் நான் பேச வேண்டும். எனவே எனது வார்த்­தை­களில் பக்­குவம் பேணப்­பட வேண்டும். நேர்­மையும் தூர நோக்கும் சாணக்­கி­யமும் இருக்க வேண்டும். ஆனால் இவை எவை­யுமே இன்று தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பி­னரின் பேச்­சுக்­களில் தென்­ப­ட­வில்லை என்­றுதான் நான் இன்று இந்த விஷ­யத்தை நோக்­கு­கின்றேன். 

ஏனென்றால் இந்த கரை­து­றைப்­பற்று தேர்­தலை எடுத்­தாலும் இதற்கு முன்னர் நடந்த வட மாகாண சபைத் தேர்­தலை எடுத்­தாலும் பூந­கரி பிர­தேச சபைக்­கான தேர்­தலை எடுத்­தாலும் மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுடன் சேர்ந்­தி­ருந்து அமைச்சுப் பத­வி­களை அனு­ப­வித்தோம் என்­பதை குத்திக் காட்டிப் பேசு­கின்ற தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­மைகள் அந்த அர­சாங்­கத்தில் இருந்து கொண்டு நாங்கள் இரண்­டறக் கலக்­காது தனித்­துப்­போட்­டி­யிட்­டதன் உள்­நோக்கம் என்ன என்­பதை புரிந்து கொள்ள வேண்டும். 

மஹிந்த அரசின் வற்­பு­றுத்­தல்­க­ளுக்கு அடி பணி­யாமல் தொடர்ந்தும் எமது தனித்­து­வத்தைத் தக்க வைத்துக் கொண்டு போரா­டினோம் என்­பதை குறைந்தபட்சம் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எங்­க­ளுக்கு கிளி­நொச்சி பூந­க­ரி­யில்போய் தேர்தல் கேட்க வேண்­டிய அவ­சி­யமே இருக்­க­வில்லை. ஆயி­ரத்­திற்கு மேற்­பட்ட முஸ்லிம் வாக்­கா­ளர்­களில் எத்­தனை பேர் வாக்­க­ ளிக்க முன்­வந்­தார்­களோ தெரி­யாது. 

எங்­க­ளது கட்­சிக்கு நூற்றி ஐம்­பத்­தெட்டு வாக்­குகள் கிடைத்த கார­ணத்­தினால் தமிழ்­ தே­சியக் கூட்­ட­மைப்பு அந்த பூந­கரி பிர­தேச சபையைக் கைப்­பற்­றி­யது. இல்­லை­யென்றால் மஹிந்த ராஜ­ப­க்க்ஷவின் வெற்­றிலைச் சின்னம் பூந­க­ரியை வென்­றி­ருக்கும். ஆனால் அமைச்­ச­ர­வை­யிலும் வெளியில் கட்சித் தலை­வர்­களின் கூட்­டத்­திலும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்க்ஷ மிகவும் கோபத்­தோடு என்னை சுட்டிக் காட்டி காட்­ட­மாக விமர்­சித்துப் பேசினார். 

அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன், மஹிந்த ராஜ­ப­க் ஷ­வையும் டக்ளஸ் தேவா­னந்­தா­வையும் பஷில் ராஜ­ப­க் ஷ­வையும் தூண்­டி­விட்­ட­தற்­கான காரணம் நாங்கள் தனித்து அங்கு தேர்­தலில் போட்­டி­யிட்­ட­த­னால்தான். பூந­க­ரியில் தனித்துக் கள­மி­றங்­கப்போய் மஹிந்­த­வி­னதும் சக­பா­டி­க­ளி­னதும் கடும் கோபத்­திற்கு நான் ஆளா கினேன். நாங்கள் தனித்­துவம் பேணி­யதால் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பினர் அடைந்த நன்­மைகளைப் பற்­றியும் அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். எங்­க­ளுக்கு பூந­க­ரியில் ஓர் ஆசனம் கிடைக்­கு­மென்ற நப்­பா­சையில் நாங்கள் அங்கு போட்­டி­யிட முன்­வ­ர­வில்லை. 

தமிழ் பேசும் மக்­களின் பூமியை தமிழ் பேசும் மக்­களின் தனித்­து­வ­மான அர­சியல் இயக்­கங்கள் ஆள வேண்டும் என்­பதில் முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கு ஒரு தனி­யான கொள்கை இருக்­கின்­றது. எங்­களைச் சோரம் போன­வர்­க­ளாகப் பார்க்­கின்ற தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­மைகள் நாங்கள் அமைச்சுப் பத­வி­க­ளுக்குச் சோரம் போன கூட்­ட­மல்ல. அமைச்சுப் பத­வி­களைத் தூக்கி எறிந்து விட்டு வந்த கூட்டம் என்­பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதனால் ஆட்­சி­களை மாற்றிக் காட்­டி­யி­ருக்­கின்றோம். 

இந்த நாட்டின் சுதந்­தி­ரத்­திற்குப் பின்­ன­ரான அர­சியல் வர­லாற்றில் அமைச்சர் ஒருவர் மூன்று முறை பத­வியை விட்டு வெளி­யேறிய மூன்று கார­ணத்தை காட்ட முடி­யுமா என நான் கேட்­கின்றேன். இதைப் பற்றி நான் தமிழ் பேசும் தலை­மை­க­ளிடம் கேட்க விரும்­பு­கின்றேன். 

அவர்கள் எங்­களைக் கடிந்து பேசு­கின்­றார்கள் என்­ப­தற்­காக நான் அவ்­வாறு நடந்து கொள்ள விரும்­ப­வில்லை. எங்­க­ளது அர­சியல் நேர்­மை­யென்­பது முக்­கி­ய­மா­னது. நீங்கள் நினைக்­கின்ற மாதிரி நாங்கள் முடி­வெ­டுக்க வேண்டும் என்­பதும் பிழை­யான விஷ­ய­மாகும். முஸ்லிம் காங்­கி­ரஸின் அர­சி­யலையும் முஸ்லிம் சமூ­கத்தின் இருப்­பையும் உரி­மை­ க­ளையும் பாது­காப்­ப­தற்கு எந்த முடிவை மேற்கொள்ள வேண்டும் என்­பதை இந்தத் தலை­மைதான் தீர்­மா­னிக்க வேண்டும். 

எமது மக்­கள்தான் தீர்­மா­னிக்க வேண்டும். நீங்கள் இழுக்­கின்ற பக்கம் எல்லாம் நாங்கள் போக வேண்டும் என்ற ஒரு நியதி கிடை­யாது. நாங்கள் தவ­றான முடி­வெ­டுத்­தி­ருக்­கலாம். அந்த தவறை நினைத்து நாங்கள் வருந்­தி­யி­ருக்­கலாம். கிழக்கு மாகாண சபை முடி­வுற்ற தரு­வாயில் அந்த முடிவை எடுப்­ப­தற்கு சில நியா­யங்கள் இருந்­தன. அதி­கா­ரத்தைக் கண்டு எங்­களில் சிலர் அள்­ளுண்டு சோரம்­போ­கின்ற நிலைமை இருந்­தது. சமுர்த்தி நிய­மனம் மற்றும் வேறு அதி­கா­ர ங்கள் என்று பின்னால் போன­வர்கள் எதுவும் கிடைக்­காமல் ஏமாந்து போய் எங்­க­ளோடு மீண்டும் வந்து இணைந்து கொண்­டி­ருக்­கின்­றார்கள். 

அவ்­வப்­போது சில­ருக்கு தடு­மாற்­றங்கள் ஏற்­ப­டு­கின்­றன. அவ்­வா­றான தடு­மாற்­றங்­க­ளி­லி­ருந்து இந்த முழு இயக்­கத்­தையும் பாது­காக்க வேண்டும் என்ற சவா­லுக்கும் நான் அடிக்­கடி உட்­ப­டு­கின்றேன். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அடை­யப்­போ­கின்ற வெற்­றிக்கு குறுக்­காக நிற்­ப­தற்கு நாங்கள் விரும்­ப­வில்லை. வடக்கில் தேர்­தலை நடத்­தக்­கூ­டாது என்று ராஜ­பக்க்ஷ அர­சாங்கம் என்­னென்ன வெல்­லாமோ செய்­யப்­பார்த்­தது. அதற்­காக அமைச்­ச­ர­வைக்குள் மஹிந்த ராஜ­ப­க்க்ஷ­வோடு ஏறத்­தாழ ஒன்­றரை மணித்­தி­யா­லங்கள் நான் வாதா­டி­யி­ருக்­கிறேன். 

ஜோர்­தா­னுக்கு போயி­ருந்த நான் உட­ன­டி­யாக நாடு திரும்பி விமான நிலை­யத்­தி­லி­ருந்து நேராக அமைச்­ச­ர­வைக்­ கூட்­டத்­திற்குச் சென்று பதின்­மூன்­றா­வது சட்­டத்­தி­ருத்­த த்தை இல்­லாமல் செய்­வ­தற்கு அர­சாங்கம் கொண்டு வந்த அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்தை எதிர்த்து ஒன்­றரை மணி நேரம் வாதா­டி­யி­ருக்­கின்றேன். மஹிந்த ராஜ­ப­க்க்ஷவும் நானும் மாறி மாறி ஒன்­றரை மணி நேரம் வாதா­டி­யி­ருக்­கின்றோம். அந்த வாரத்தில் வெளி­வந்த எல்­லாப்­பத்­தி­ரி­கை­க­ளிலும் அதனைப் பிர­சு­ரித்­தி­ருந்­தார்கள். 

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் அர­சியல் வெற்­றிக்கு குறுக்கே நின்று மஹிந்த ராஜ­ப­க்க்ஷவின் அர­சாங்­கத்­திற்குச் சாமரம் வீச வேண்­டு­மென்று நாம் அவ­ரது அர­சாங்­கத்தில் சேர­வில்லை. அவ­ரது அர­சாங்­கத்தில் இருந்து கொண்டு நாங்கள் தனித்­து­வ­மாக போட்­டி­யி­டுவோம் எனப்­பி­டி­வா­த­மாக இருந்த கார­ணத்­தினால் பூந­க­ரியில் மட்­டு­மல்ல மன்னார் மாவட்­டத்­திலும் பிர­தேச சபை­க­ளிலும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு வெற்றி பெறு­வ­தற்கு நாங்கள் கார­ண­மாக இருந்­தோ­மென்று மஹிந்த ராஜ­ப­க்க்ஷ­விடம் எங்­களைக் காட்டிக் கொடுத்­தவர்களும் இப்­பொ­ழுது மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யா­கி­யுள்ள அர­சாங்­கத்­தோடு இருக்­கின்றார். 

இப்­போது எங்­களை விட புதிய அரசின் சிறந்த நண்­ப­ரா­கத்­தென்­ப­டு­கின்ற மாதிரி அவர் கதைப்பார். முத­ல­மைச்சர் பதவி பற்றி அவர் என்ன கூறினார் என்­பது உங்­க­ளுக்கு தெரியும். முத­ல­மைச்சர் பத­விக்­கா­லத்தின் முதல் பகு­தியை ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் நஜீப்.ஏ.மஜீத்­திற்கு கொடுத்­து­விட்டு எங்­க­ளது பங்கை அனு­ப­விப்­ப­தற்­கான கட்டம் வந்­த­போது தான் ஆட்சி மாற்றம் ஏற்­பட்­டது. இந்தக் கட்­டத்தில் எங்­க­ளுக்­குக்­கி­டைக்க இருந்த முத­ல­மைச்சர் பத­வியைப் பறித்து தங்­க­ளுக்குத் தர வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­பினர் பிடி­வா­த­மாக இருந்­தனர். 

கிழக்கின் முத­ல­மைச்சர் பத­வியின் இரண்­டா­வது பகு­தியை எங்­க­ளுக்குத் தரு­வ­தாக உடன்­பாடு காணப்­பட்­ட­போது தாமும் உட­னி­ருந்­த­தாக நினை­வு­ப­டுத்தி எங்­க­ளுக்கு அத­னைத்­த­ரு­வ­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பெரு­ம­ன­துடன் முன்­வந்­ததற்கு நாங்கள் அவ­ருக்கு நன்றி செலுத்­து­கின்றோம். நாங்கள் கிழக்கு மாகாண சபையில் கூடிய உறுப்­பி­னர்கள் எங்­க­ளோடு இருப்­பதை ஆளு­ந­ருக்கு ஒப்­பு­வித்து சத்­தி­யப்­பி­ர­மானம் செய்து கொண்டோம். 

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­ன­ருடன் ஓர் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கு அவர்­க­ளுடன் மூன்று நான்கு தட­வைகள் கதைத்தோம். அவர்­க­ளது பிடி­வாத போக்கில் எந்த வித­மான தளர்வும் இல்­லாத நிலையில் இறு­தியில் நாங்கள் முடி­வெ­டுத்­த­போதும் அவர்­க­ளது மாகாண சபை உறுப்­பி­னர்கள் கூடி எங்­க­ளோடு உடன்­பாடு ­காணவந்­தார்கள் அதையும் இப்­பொ­ழுது தலை­மையின் அங்­கீ­கா­ர­மின்றி நடந்­த­தாக அவர்கள் கூறலாம். 

ஆனால் எங்­களை பொருத்­த­வரை தலை­மையின் அங்­கீ­கா­ரத்­து­டன்தான் எல்லாம் நடக்­கின்­றன என்ற நம்­பிக்­கையில் அவர்­க­ளோடு நாங்கள் சில உடன்­பா­டு­க­ளுக்கு வந்தோம். உடன்­பா­டு­களை நாம் நிச்­ச­ய­மாக கெள­ர­விப்போம். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குக் கிடைக்க வேண்­டிய அமைச்சுப் பத­வி­களைக் கொடுத்து கிழக்கில் எமது தலை­மையில் ஒரு தேசிய அர­சாங்கம் அமைந்­தது என்ற பெரு­மையை நிலை­நாட்­டுவோம்.

இன்னும் பக்­குவம் தவறி எடுத்­தெ­றிந்து பேசு­கின்ற நிலைமை தொடர்ந்து மிகவும் வேத­னைக்­கு­ரி­யது. ஏனென்றால் அண்ணன் சம்­பந்தன் மூத்த அர­சியல் வாதி. அவ­ரோடு என்னை ஒப்­பி­டு­வது மலைக்கும் மடு­வுக்­கு­முள்ள வித்­தி­யாசம். அவ­ரி­ட­மி­ருந்து படிக்க வேண்­டி­யவை நிறைய உள்­ளன. அவரை நான் நொந்து கொள்ள விரும்­ப­வில்லை. நான் அவரை விமர்­சிப்­பதன் மூலம் என்னை நான் உயர்த்திக் கொள்ள முடியும் என்றும் நான் நினைக்­க­வில்லை.

அந்த மூத்த அரசியல் தலை­மைக்கு முழு­மை­யாக மதிப்­ப­ளிக்க நான் கட­மைப்­பட்­டுள்ளேன். இந்த நிலையில் அண்ணன் சம்­பந்­தனை எங்­க­ளது குரு­வா­கத்தான் நான் பார்க்­கின்றேன். இந்த இடத்தில் மஹா­பா­ர­தத்தில் வரு­கின்ற ஓர் உதா­ர­ணத்தை கூறிக் காட்ட விரும்­பு­கின்றேன். இந்த முத­ல­மைச்சர் பத­வியை அண்ணன் சம்­பந்தன் தங்­க­ளுக்குத் தரவேண்­டு­மெனக் கேட்­டதை மஹா­பா­ர­தத்தில் வரு­கின்ற ஒரு சம்­ப­வத்­தோடு ஒப்­பிட்­டுக்­காட்ட நான் விரும்­பு­கின்றேன். அது எவ்­வ­ளவு தூரம் எங்­க­ளது கட்­சி­யையும் அர­சி­ய­லையும் பாதிக்கும் என்கின்ற நிலையிலேயே இதனைக் கூறுகின்றேன். 

அது என்ன சம்பவம் என்றால் மஹாபாரதத்தில் ஏகலைவன் குரு துரோணாச்சாரியாரைப்பற்றி அதனை படித்தவர்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் தனது பயிற்சியை வில்வித்தையில் தனது மாணவன் ஏகலைவனுக்கு வழங்கிய துரோணாச்சாரியார் கடைசியில் கற்றுத் தேர்ந்த பிறகு குருதட்சணை என்று வரும்போது அந்த குரு தட்சணையை கேட்கும்போது துரோணாச்சாரியார் ஏகலைவனிடம் கேட்டது வேறெதையுமல்ல உனது கட்டை விரலை வெட்டித்தா என்று கேட்கின்றார். 

கட்டை விரலை வெட்டினால் வில்வித்தையில் ஏக வலைவனால் நீடிக்க முடியாது. அவ்வாறு துரோணாச்சாரியார் கட்டை விரலை ஏகலைவனிடம் கேட்ட மாதிரி தான் கேட்டத்தற்குச் சமமாகத்தான் முதலமைச்சர்பதவியை சம்பந்தன் ஐயா கேட்கின்றார் என்ற அளவிற்கு எங்களது உணர்வுகள் இருந்தன. எவ்வளவு தூரம் முஸ்லிம் காங்கிரஸின் அரசியலில் இந்தக் கட்டத்தில் முதலமைச்சர் பதவியை நாங்கள் கிழக்கில் பறிகொடுத்திருந்தால் பாதிக்கப்பட்டிருப்போம் அது எங்களுக்கு வாக்களித்த மக்களும் எங்களுக்கு எதிராக இயங்குகின்றவர்களும் எங்களைத் தூற்றுவதற்கு வாய்ப்பாக போய் விடும்.

அரசியலில் மூத்தவராக இருப்பதால் சம்பந்தன் ஐயாவை நான் குருவாக பார்க்கின்றேன். வில்வித்தை கற்றுக்கொடுத்துவிட்டு கட்டை விரலை கேட்பது போலத்தான் சம்பந்தன் ஐயா இச்சந்தர்ப்பத்தில் கிழக்கின் முதலமைச்சர் பதவியை கேட்பது அமைகின்றது. இதற்கப்பால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினருடன் நீண்ட நெடிய பயணத்தை தொடர வேண்டியவர்கள் நாங்கள் என்றார்.