Breaking News

சிறிலங்கா – இந்திய உறவு நெருக்கம் சீனாவுக்கு மகிழ்ச்சியாம்

இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கம் சீனாவுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக, சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பீஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், ஹுவா சுன்யிங்கிடம், சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில், அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு உள்ளிட்ட உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், “சிறிலங்காவும் இந்தியாவும், சீனாவின் மிக முக்கியமான அயல் நாடுகள்.அமைதி மற்றும் செழுமைக்கு மூலோபாய ஒத்துழைப்பை மேலும் விருத்தி செய்வதற்கு இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற முடியும் என்று நாம் நம்புகிறோம்.

சிறிலங்காவுடன் நீண்டகால நட்புறவு மற்றும் நேர்மையான பரஸ்பர உதவியுடன், மூலோபாய கூட்டு ஒத்துழைப்பை வளர்ப்பற்கு நாம் எதிர்பார்த்திருக்கிறோம்.சீன- இந்திய உறவுகள், சீன – சிறிலங்கா உறவுகள் அபிவிருத்திக்கு உதவும் என்று நம்புகிறோம்.

அதேவேளை, சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலையான உறவுகள் வளர்ச்சியடைவதை நாம் வரவேற்கிறோம்.இந்த மூன்று இணை உறவுகளை பரஸ்பரம் ஒருவருக்கொருவர் ஊக்கமளிக்க முடியும் என்றால், அது பிராந்தியத்தின் அமைதி, உறுதிப்பாடு, அபிவிருத்திக்கு பயனுடையதாக இருக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.