சர்வதேச விசாரணை தொடராவிட்டால் அஹிம்சைப் போராட்டம் - சண் குகவரதன்
இலங்கை மீதான ஜெனீவா மனித உரிமைச் சபையின் சர்வதேச விசாரணை உரிய முறையில் நடத்தப்படவில்லையானால் ஜனநாயக வழியிலான அஹிம்சைப் போராட்டம் ஒன்றை நடத்த வேண்டி ஏற்படும் என ஜனநாயக மக்கள் முன்னணி எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரசாங்கம் நடத்திய சுதந்திர தின வைபவத்தில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கசேணன் கலந்துகொள்ளவில்லை என்றும் நிரந்த அரசியல் தீர்வு எற்படாத நிலையில் அரசாங்கத்தின் வைபவங்களில் கலந்துகொள்வது ஏற்புடையது அல்ல என்றும் முன்னணியின் உப பொதுச் செயலாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான சண் குகவரதன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தொிவித்துள்ளதாவது;
ஆட்சிமாற்றத்தின் பின்னரும் தமிழர்கள் மீதான விசாரணைகளும் கைதுகளும் தொடா்கின்றன. மைத்திபாலசிறிசேன ஜனாதிபதியாக வருவதற்கு தமிழ் மக்களின் வாக்குகளே காரணமாக இருந்தன. ஆனால் அரசாங்கத்தின் செயற்பாடுகளில் அந்த நன்றிக் கடனை காணமுடியவில்லை.
இராணுவத்திற்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நடைமுறைகள் அரசாங்கம் கூறிய நல்லாட்சி கோட்பாட்டுக்கு எதிரானது.புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களை தாயம் திரும்புமாறு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் புலம்பெயர் நாடுகளில் உள்ள சில தமிழ் அமைப்புக்களுக்கும் சில நபர்களுக்கும் மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் விதித்த தடையை புதிய அரசாங்கமும் நீடித்துள்ளது.
அதேவேளை கடந்த 2ஆம் திகதி மட்டக்களப்பு மாங்காட்டைச் சேர்ந்த 36 வயதுடைய கந்தசாமி கருணாநிதி என்ற ஒரு பிள்ளையின் தந்தை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மூன்றாம் திகதி டுபாயிலிருந்து தாயகம் திரும்பிய மட்டக்களப்பு–கொக்கட்டிச் சோலை 9ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 29 வயதான தாமோதரம்பாஸ் கரன் என்ற ஒரு பிள்ளையின் தந்தை கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வைத்துபுலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஆகவே தமிழ் மக்களுக்கு எதிரான இவ்வாறான செயற்பாடுகளை புதிய அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும். ஜனநாயகமும் நல்லாட்சியும் சிங்கள மக்களுக்கு மாத்திரமல்ல. அது வடக்கு கிழக்கு மக்களுக்கும் அவசியமானது. அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் புதிய அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து ஜெனிவா மனித உரிமைச் சபையின் இறுதிக்கட்ட பேர் தொடர்பான சர்வதேச விசாரணைகளை நிறுத்த முற்படுகின்றன.
அரசாங்கமும் அந்த விசாரணையை நிறுத்த முற்படுகின்றது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டால் இனப்பிரச்சினைக்கு தீர்வு வந்துவிடும் என எதிர்ப்பார்ப்பது ஏற்புடையது அல்ல. ஆகவே சர்வதேச விசாரணை தொடர வேண்டும் என சண் குகவரதன் மேலும் வலியுறுத்தியுள்ளார்.