மைத்திரி, ரணில், சம்பந்தனின் சூழ்ச்சி கூட்டணியே தேசிய அரசாங்கம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சம்பந்தன் ஆகியோரின் சூழ்ச்சிக் கூட்டணியே தேசிய அரசாங்கம். தேசிய அரசாங்கம் தொடருமாயின் புலம்பெயர் அமைப்புக்களுக்கே வாய்ப்பாக அமையுமென குற்றம் சுமத்தும் தூய்மையான ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில, சதிகார கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பிரதான பங்காளிக் கட்சிகளின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கொழும்பு தேசிய நூலகத்தில் இடம்பெற்றது. இதில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் இருந்து பிரதான உறுப்பினர்களை வெளியெடுத்து தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதென்பது மக்களின் ஆட்சியினை நடத்தவோ அல்லது தேசியத்தினை கட்டியெழுப்பவோ அல்ல. இக்கூட்டணி பிரிவினை வாதக் கூட்டணி, ஐக்கிய தேசிய கட்சி தமிழ் தேசியக்கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என பிரிவினைகட்சிகள் ஒன்றிணைந்து சர்வதேசத்தின் தேவையினை பூர்த்தி செய்யவே தேசிய அரசாங்கத்தினை உருவாக்கியுள்ளன. இதனால் மக்களின் பிரச்சினைகளோ அல்லது தேசிய பிரச்சினையோ தீரப்போவதில்லை.
இந்த அரசாங்கத்தில் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஆகியோரின் தீர்மானங்களே பிரதானமானவை. சர்வதேச சக்திகளை திருப்திப்படுத்தவும் புலம்பெயர் அமைப்புக்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யவுமே இவ் தேசிய அரசாங்கம் முயற்சிக்கின்றது.
எனவே எதிர்வரும் பொதுத் தேர்தலில் இந்த தேசிய அரசாங்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து பலமானதொரு கட்சியினை உருவாக்க வேண்டும். இச் சதிகாரக் கூட்டணியின் சூழ்ச்சித் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து மக்களை காப்பாற்ற வேண்டும்.அதற்காக சகல முயற்சிகளையும் நாம் கூட்டாக எடுத்து வருகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.