புதிய சட்ட- ஒழுங்கு அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை
இலங்கையில் சட்டம்- ஒழுங்குக்குப் பொறுப்பான புதிய அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களில் 114 உறுப்பினர்களின் கையொப்பம் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு கிடைத்துள்ளதாக எதிரணியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜோன் செனவிரட்ன பிபிசியிடம் கூறினார்.
வத்தளை பிரதேசசபை தலைவர் மீது அண்மையில் நடந்த தாக்குதலுடன் பொதுமக்கள் பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு தொடர்பு இருப்பதாக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறுகின்றனர்.
அவ்வாறே, ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் எதிர்க்கட்சியினர் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுப்பதற்கு புதிய அமைச்சர் தவறிவிட்டதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.அமைச்சர் ஜோன் அமரதுங்க
'எதிர்க்கட்சியினருக்கு வேறு வழியில்லை... இந்தப் பிரச்சனை தொடர்பில் நாடாளுமன்றத்தில் பேசியிருந்தோம். கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பேசியிருந்தோம். அப்படியிருந்தும் இந்த தாக்குதல்கள் நிறுத்தப்படாவிட்டால் எதிர்க்கட்சிக்கு அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டுவருவதைத் தவிர வேறு என்ன வழி தான் இருக்கின்றது' என்றார் ஜோன் செனவிரட்ன.
இதேவேளை, தன்மீது எதிர்க்கட்சியினர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை சிறுபிள்ளைத் தனமானது என்று அமைச்சர் ஜோன் அமரதுங்க பிபிசியிடம் கூறினார்.
'இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை நான் வாசித்துப் பார்த்தேன். அதில் எனக்கு எதிராக விரல் நீட்டுவதற்குரிய குற்றச்சாட்டுக்கள் எதுவும் இல்லை. அதில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவம் நடந்தபோது நான் அங்கிருக்கவில்லை. அதில் நான் தொடர்புபட்டிருக்கவும் இல்லை' என்றார் ஜோன் அமரதுங்க.
'இதனைவிட பாரதூரமான சம்பவங்கள் இந்த நாட்டில் நடந்திருக்கின்றன. அதுபற்றி பேசாமல் இரண்டு தரப்புக்கு இடையில் நடந்த மோதலில் சிறுகாயம் ஏற்பட்ட சம்பவத்திற்காக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்திருக்கிறார்கள்' என்றும் கூறினார் அமைச்சர்.
எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது பொலிஸார் சட்டப்படி நடவடிக்கை எடுத்துவருவதாகவும் ஜோன் அமரதுங்க பிபிசியிடம் கூறினார்.