லண்டனில் மக்களின் பேராதரவுடன் நடைபெற்ற தமிழின அழிப்பு ஆவண அறிமுக நிகழ்வு (படங்கள் இணைப்பு)
இலங்கையில் ஈழத்தமிழினத்தின் மீது சிங்கள பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பினை ஆவணமாக பதிவு செய்துள்ள "Sri Lanka Hiding the Elephant: Documenting Genocide, War crimes and crimes against humanity" எனும் புத்தகம் லண்டனில் மக்களின் பேராதரவுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழக அரசியல் மற்றும் பொது நிர்வாகத்துறை தலைவரும், பேராசிரியரும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வளஅறிஞர் குழுவின் பிரதிநிதிகளில் ஒருவருமான இராமு.மணிவண்ணன் அவர்களால் இந்த ஆவணம் எழுதப்பட்டுள்ளது.
சாட்சியங்கள், ஆதாரங்கள், புள்ளிவிபரங்கள், ஒளிப்படங்கள் உள்ளடங்கலாக பல்வேறு விடயங்கள் மூலமாக தமிழின படுகொலையினை ஆயிரம் பக்கங்களுக்கு மேல் ஆவணப்படுத்தியிருந்த பேராசிரியர் மணிவண்ணன் அவர்கள் லண்டன் அறிமுக நிகழ்வுக்கு நேரடியாக வருகை தந்திருந்தார்.
அமெரிக்கா கனடா ஜெனீவா மற்றும் தமிழகம் ஆகிய இடங்களில் இடம்பெற்றிருந்த இந்த ஆவணத்தின் அறிமுக நிகழ்வு லண்டனில் கடந்த ஜனவரி 31ம் நாளன்று சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தாயக அபிவிருத்தி விவகார அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்களின் தலைமையில் செயலர் வி.ஜெயந்தன் அவர்களின் ஒருங்கமைப்பில் இந்த அறிமுக நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வுக்கு 300க்கும் மேலான தமிழீழ ஆதரவாளர்கள், உணர்வாளர்கள், பன்னாட்டு மனித உரிமை செயற்பாட்டாளர்கள், தேசிய அமைப்பாளர்கள், சர்வதேச ஊடகவியலாளர்கள், பிரித்தானியாவை மையமாகக் கொண்ட தமிழ் அமைப்புக்கள் என பல தரப்பினரும் பங்கெடுத்துள்ளனர்.
நிகழ்வில், பேராசிரியர் சொர்ணராசா (Head of International Centre for Prevention and Prosecution of Genocide -இனஅழிப்புத் தடுப்பும் விசாரணை முயற்சிகளுக்கான அனைத்துலக மையம்), திரு.ராபர்ட் இவான்ஸ் (Senator of TGTE and former MEP), திரு.கிரேகம் வில்லியம்சன் (Head o fNation without State) , திரு.தில்லைநடராசா (Dep. Speaker of TGTE), செல்வி. ஜனனி ஜனநாயகம் ( Head of TAG), செல்வி. தமிழ்வாணி, திருமதி. ஆனந்தி சூரியபிரகாசம் (தலைவர் - அனைத்துலக ஊடகவியலாளர் ஒன்றியம்), திருமதி. புஸ்பராணி வில்லியம்ஸ் (USTPAC), திரு. ரவிக்குமார் (தலைவர் BTF), திரு. சென் கந்தையா (Head of Tamil for Labour) , திரு. ராஜ்குமார் (BTF), திரு. போஸ் (TNA-UK) ஆகியேர் ஆவணம் தொடர்பில் குறித்துரைத்திருந்ததோடு சமகால அரசியல் நிலைவரம் குறித்தும் உரையாற்றினார்கள்.
இந்நிகழ்வின் ஏற்புரையில் பேராசிரியர் இராமு.மணிவண்ணன் ஆவணத்தின் மையக்கருத்தாக இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வே ஒரே வழி என்றும், அதன் படித்தளங்களாக பன்னாட்டு விசாரணை, தமிழ் மக்களின் தேசிய அங்கீகாரம், புலம்பெயர் தமிழ் மக்களின் பங்கெடுப்புடன் பொது வாக்கெடுப்பு என்ற அடிப்படைக் கொள்கைகளுடன் அரசியல் கருவியாகத்தான் இவ் ஆவணம் பார்க்கப்பட வேண்டும் என வேண்டினார்.
நூற்றுக்கும் அதிகமானோர் ஆர்வமுடன் பேராசிரியர் இராமு.மணிவண்ணனிடமிருந்து நேரடியாக ஆவணத்தை பெற்றுக்கொண்டனர்.