சம்பூர் மீள்குடியேற்ற விவகாரம் – நாளை ஜனாதிபதிக்கு அறிக்கை கையளிப்பு
சம்பூரில் அமைக்கப்பட்டுள்ள உயர் பாதுகாப்பு வலயத்தினால், இடம்பெயர்ந்துள்ள மக்கள் தொடர்பாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நாளை அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார் கிழக்கு மாகாணத்தின் ஆளுனர் ஒஸ்ரின் பெர்னான்டோ.
கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுனராக பதவியேற்றுள்ள ஒஸ்ரின் பெர்ணான்டோ, நேற்று சம்பூர் பிரதேசத்திற்கு சென்று, அங்கு இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக ஆராய்ந்தார்.
அவருடன் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் ரஞ்சித் டி சில்வா உள்ளிட்ட அதிகாரிகளும் சென்றிருந்தனர்.சம்பூர் பிரதேசத்தை பார்வையிட்ட ஆளுனர், இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்து அவர்களது பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் தொடர்பாக கேட்டறிந்தார்.
இடைத்தங்கல் முகாம்களில் 9 ஆண்டுகளாக தங்கியுள்ள தங்களை நேரில் வந்து சந்தித்து பிரச்சினைகளை கேட்டறிந்த முதலாவது ஆளுனர் என்று கூறிய மக்கள், தங்களது விரைவான மீள்குடியேற்றத்தின் அவசியத்தை அவரிடம் வலியுறுத்தினர்.
சம்பூர் பிரதேசத்தில் அமைந்துள்ள கடற்படை முகாம், முதலீட்டு வலயத்திற்கான காணிகள் அடையாளமிடப்பட்டுள்ளமை மற்றும் உத்தேச அனல் மின்நிலையம் போன்ற காரணங்களினாலேயே இந்த பிரதேச மக்களின் மீள்குடியேற்றம் தடைப்பட்டுள்ளது.
கடற்படை முகாமை அகற்றுதல் அல்லது வேறு இடத்தில் அமைத்தல் அல்லது அதன் பரப்பை சுருக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தபோது, அது பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்புடைய விடயம் என ஆளுனரால் பதில் அளிக்கப்பட்டதாக கிழக்கு மகாணசபை உறுப்பினர் குமாரசாமி நாகேஸ்வரன் கூறினார்.
அனல்மின் உற்பத்தி நிலையத்திற்கு என அடையாளமிடப்பட்டுள்ள காணியின் அளவை குறைத்தல், உத்தேச முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தை மீளாய்வு செய்தல் போன்ற நடவடிக்கைகளின் மூலமும் மீள்குடியேற்றத்தை மேற்கொள்ள முடியும் என்று மக்களால் ஆளுனரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதற்கு பதில் அளித்த ஆளுனர் ஒஸ்ரின் பெர்ணான்டோ, மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான அறிக்கையொன்று எதிர்வரும் செவ்வாய்கிழமை அதாவது நாளை ஜனாதிபதிக்கு கையளிக்கப்படும் என கூறியதாகவும் குமாரசாமி நாகேஸ்வரன் தெரிவித்தார்.