விக்னேஸ்வரனின் உணர்வுகளை ஜனாதிபதியும், பிரதமரும் புரிந்துகொள்ள வேண்டும் -மனோ கணேசன்
தமிழ் மக்களின் ஆணையையும், ஆதரவையும் பெற்றுள்ள கட்சிகளையும், தலைவர்களையும் புரிந்துக்கொள்வதன் மூலமேயே தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்ட முடியும். இதற்கு வேறு எந்த குறுக்கு வழிகளும் கிடையாது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மனோ கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடமாகாணசபை கடுமையான ஒரு தீர்மானத்தை நேற்று நிறைவேற்றியுள்ளது. பிரேரணையை சமர்பித்து வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் சபையில் ஆற்றிய உரையில் புதிய அரசாங்கத்தையும், குறிப்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும், பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நிலைமை இந்த அளவுக்கு பாரதூரமானதையிட்டு நான் கவலையடைகிறேன். இதையிட்டு இன்று காலை நான் பிரதமரிடம் தொலைபேசியில் உரையாடியுள்ளேன்.
வடக்கு மாகாண தமிழ் மக்களின் ஆணையை பெற்றுள்ள வடமாகாணசபை உறுப்பினர்களினதும், அதன் முதல்வரினதும் மன உணர்வுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் புரிந்துக்கொள்ள வேண்டும்.
வடக்கிலே இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைப்பது என்பது வேறு. இராணுவ தேவைகளுக்கு தொடர்பில்லாத நடவடிக்கைகளுக்காக வடக்கில் இராணுவம் கைப்பற்றி பயன்படுத்தும் காணிகளை, அவற்றை உரிய மக்களிடம் மீள கையளிப்பது என்பது வேறு. இதுபற்றி நாங்கள் தேசிய நிறைவேற்று சபையில் கலந்து பேசினோம். அங்கு இது தொடர்பில் ஒரு பொது கருத்து உருவாகும் நிலைமை உருவாகியது.
ஜேவிபி தலைவர் அனுரகுமார திசாநாயக்க மற்றும் ஹெல உறுமயவின் இரத்தின தேரர் ஆகியோரும் இராணுவம் வடக்கில் கொல்ப் விளையாட்டு மைதானம், சுற்றுலா விடுதிகள் போன்றவற்றை அமைக்க பொது மக்களின் காணிகளை கையகப்படுத்தி வைத்துள்ளதை எதிர்த்து கருத்துகளை தெரிவித்தனர். இப்போது தேசிய நிறைவேற்று சபை கடந்த இரண்டு வாரங்களாக கூடவில்லை.
இராணுவத்தை படிப்படியாக வாபஸ் வாங்குவது என்பதற்கு முன் இராணுவம், இராணுவ தேவைகளுக்கு அப்பால் சென்று கையகப்படுத்தி வைத்துள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை மீள கையளிக்க வேண்டும்.
இன்று வட்டக்கச்சி, சிறுவையாறு, முழங்காவில், அம்பகாமம், கேப்பாப்பிலவு கிராமங்களில், இலங்கை இராணுவம் பாற்பண்ணை, விவசாய பண்ணை, மரமுந்திரி தோட்டம், நெல் வயல் விவசாயம் ஆகியவற்றை நடத்திகொண்டு இருப்பதாக எனக்கு சொல்லப்பட்டுள்ளது.
வலிகாமம் வடக்கில் கிராமத்து வீடுகள் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன. அங்கு வாழ்ந்த மக்கள் விட்டுச்சென்ற மாடுகளை கைப்பற்றி இன்று அங்கு மாட்டுப்பண்ணையையும், யோகர்ட் தொழிற்சாலையையும் மற்றும் ஏறக்குறைய எட்டு சுற்றுலா விடுதிகளையும் இலங்கை இராணுவம் நடத்துகிறது.
அங்கிருந்த முருகன் கோவில், பிள்ளையார் கோவில் இரண்டும் உடைந்து சிதிலமடைந்துள்ளன. இந்த கோவில் நிலங்களில் புதிய சுற்றுலா விடுதி காட்டப்படும் ஒரு முஸ்தீபு நடைபெறுவதாக அந்த கிராமத்தை சேர்ந்த ஒரு நண்பர் நேற்று என்னிடம் உருக்கமாக சொன்னார். இது இந்நாட்டில் வாழும் இந்துக்களை அவமானப்படுத்துகின்றது.
வடக்கில், விவசாயி, தொழிலாளி, மீனவர், சுற்றுலா விடுதியாளர் பணிகளை செய்யும் இலங்கை இராணுவ வீர்கள் கொழும்பில் நகரசுத்தி வேலைகளையும், புல் வெட்டும் வேலைகளையும் செய்து வந்தார்கள். இவை அனைத்தும் கோதாபய ராஜபக்சவின் திட்டங்கள்.
வடக்கிலிருந்து இராணுவம் வாபஸ் பெறப்படுவது என்பது வேறு. இராணுவம் கையகப்படுத்தி வைத்துள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை மீள கையளிப்பது என்பது வேறு. உண்மையில் இலங்கை இராணுவம், இராணுவ தேவைகளுக்கு அப்பால் சென்று விவசாயம் செய்வதும், சுற்றுலா விடுதிகளை நடத்துவதும் பெருவாரியான சிங்கள பொது மக்களுக்கு தெரியாது.
உண்மையில் கோவில்களை உடைத்து சுற்றுலா விடுதி கட்டுவதை உண்மை பெளத்தர்கள் ஏற்றுகொள்வார்கள் என நான் நம்பவில்லை. எனவே சிங்கள மக்கள் கோபித்துகொள்வார்கள் என தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருக்க முடியாது. இவைபற்றி சிங்கள மக்களுக்கு அரசில் உள்ள சிங்கள தலைவர்கள் விளக்கி கூற வேண்டும். இது நடக்காவிட்டால இந்த பிரச்சினைகள் ஒருபோதும் முடிவுக்கு வராது.
வடக்கில் இருந்து இராணுவம் வாபஸ் பெறுவது தொடர்பில் நாம், அங்குள்ள பாதுகாப்பு நிலைமைகளை கவனத்தில் எடுத்து எதிர்காலத்தில் தேசிய நிறைவேற்று சபையில் முடிவு செய்வோம். ஆனால், இராணுவ தேவைகளுக்கு தொடர்பில்லாத நடவடிக்கைகளுக்காக வடக்கில் இராணுவம் கைப்பற்றி பயன்படுத்தும் காணிகளை படிப்படியாக உரித்துள்ள மக்களிடம் மீள கையளிக்க அரசு தலைவர்கள் முடிவு செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.