மஹிந்த மீதான குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் போதுமான ஆதாரங்கள் உள்ளன- ராஜித
மஹிந்த மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்துக்கும் தம்மிடம் போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன என்றும், அவற்றை தேவையான சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்துவோம் என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சருமான டாக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
ஜனாதிபதியின் செலவுக்கென கோடிக்கணக்கான ரூபாய்கள் ஒதுக்கீடு, விமானக்கொள்வனவு, வாகனங்கள் மீட்பு, மற்றும் ஊழல் மோசடி உட்பட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக அரசு பல குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளது.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் நிராகரித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவற்றில் எவ்வித உண்மையும் இல்லை என்று கடந்த திங்கட்கிழமை அறிக்கையொன்றினூடாகத் தெரிவித்திருந்தார். தனக்கு எதிராக சேறு பூசும் நடவடிக்கைகளை புதிய அரசு தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றது.
மக்களைத் திசைத்திருப்பும் நோக்கில் இந்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன என்றும் அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருந்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மேற்படி அறிக்கை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் ராஜித சேனாரட்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.