வடமாகாணசபை குழப்பத்தை ஏற்படுத்துகிறது - நிமல் சிறிபால டி சில்வா குற்றச்சாட்டு
இலங்கையை சர்வதேச விசாரணைக்கூண்டில் நிறுத்த தமிழ் தலைமைகள் முயற்சிக்கின்றன. உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையினை சர்வதேசத்தின் தேவைக்கேற்ப மாற்றியமைக்கவே முயற்சிக்கின்றனர்.
நாட்டை பிரிவனைக்கு இட்டுச் செல்லும் இதுபோன்ற செயற்பாடுகளை வடமாகாணசபை நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு கூறியிருக்கிறார் எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா.
கடந்த வாரம் வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தொடர்பிலான தீர்மானம் மற்றும் இனப்படுகொலை குற்றச்சாட்டு விசாரணை தொடர்பில் சர்வதேசத்துடனான அரசின் நகர்வுகள் எதிர்க்கட்சியின் கருத்தினை வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
விடுதலைப்புலிகளுடனான ஆயுதப் போராட்டத்தில் சிங்கள மக்கள் பல இழப்புக்களை சந்தித்தனர். நாடு மிகவும் பின் தங்கிய நிலைக்கு தள்ளப்பட்டது.எனினும் எமது இராணுவத்தின் தியாகமும் அரசாங்கத்தின் முயற்சியுமே விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டையும் மக்களையும் மீட்டெடுக்க துணை புரிந்தது. யுத்தத்தின் பின்னர் வடக்கில் தமிழ் மக்கள் தமது சுதந்திரத்தினை வென்றெடுத்துள்ளனர்.
சுயாதீனமானதொரு தேர்தல் அங்கு நடத்தப்பட்டது. இராணுவத்தினரையும் குறைத்து மக்களை வாழக்கூடிய சூழ்நிலைக்கு கொண்டு சென்றோம். அதேபோல் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நேரடியாக பொது அணிக்கு ஆதரவு வழங்கி தமது நிலைப்பாட்டினை தெரிவித்தனர். இதில் பொது எதிரணியுடனான உடன்படிக்கைகள் புரிந்துணர்வுகளுடனேயே கைகோர்த்தனர்.
அவ்வாறானதொரு நிலையில் மீண்டும் நாட்டை குழப்பகரமான சூழலுக்கு கொண்டு செல்லவே வடமாகாண சபை முயற்சிக்கின்றது. வடமாகாண சபையில் இறுதியாக நிறைவேற்றப்பட்ட பிரேரணையும் நாட்டின் நல்லிணக்கத்திற்கு பங்கம் ஏற்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளது.
மேலும் இலங்கையின் மூவின மக்களும் ஒன்றுபட்டு வாழக்கூடிய நிலைமை ஏற்பட்டிருந்தும் தொடர்ச்சியாக பிரிவினையினை தூண்டும் செயற்பாட்டினை தமிழ் தலைமைகள் மேற்கொள்கின்றது. நாட்டின் நிலைமைகள் மாறினாலும் இலங்கையை சர்வதேச விசாரணைகளில் உட்படுத்தி விசாரணைக்கூண்டில் நிறுத்தவே இவர்கள் முயற்சிக்கின்றனர்.
அதேபோல் இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவற்றினை கண்டறிய உள்ளக விசாரணைப் பொறிமுறையினை பலப்படுத்த வேண்டும். இலங்கையில் ஏற்கனவே உள்ளக விசாரணை ஆணைக்குழு செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. காணாமல் போனோர் தொடர்பிலும் ஏனைய குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்படுகின்றது.
இந்நிலையில் சர்வதேச விசாரணைகளை நடத்தும் வகையில் உள்ளக விசாரணைப்பொறிமுறையினை கொண்டு செல்லவோ அல்லது சர்வதேசத்தினை திருப்திப்படுத்தும் வகையில் உள்ளக விசாரணை பொறிமுறையினை கையாள வேண்டிய அவசியமோ இல்லை. இலங்கைக்கு எது அவசியமோ அதையே கையாள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.