உள்ளக விசாரணை நடத்துவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை! நீதி அமைச்சர்
இலங்கையில் போர் குறித்த உள்நாட்டு விசாரணை ஒன்றை ஆரம்பிப்பதற்கான முடிவை இன்னமும் அரசாங்கம் எடுக்கவில்லை என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பி.பி.சி செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
முன்னைய அரசாங்கத்தினால் போர்க் குற்றங்கள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பான சரியான செயற்பாடுகளைக் கையாளாததினாலேயே ஐ.நாவினால் குழு அமைக்கப்பட்டது.
அதனடிப்படையில் அமைக்கப்பட்ட குறித்த குழுவினால் வெளியிடப்பட்ட விசாரணை அறிக்கையை தற்போதைய புதிய அரசாங்கத்தின் மீதுள்ள நம்பிக்கை காரணமாக பிற்போடுவதற்கு மனித உரிமைகள் சபை இணக்கம் தெரிவித்தது.
எனினும் உள்ளக விசாரணையை நடத்துவது குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. ஏற்கனவே அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு ஆகியவற்றின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளோம்.
வடமாகாண சபையினால் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தொடர்பான தீர்மானத்திற்கு சட்ட அந்தஸ்து கிடையாது.தேர்தல் வரும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் செய்ய முயற்சிக்கின்றது.
வெலிக்கடை சிறையில் 182 தமிழ் அரசியல் கைதிகளே உள்ளனர். அவர்களை மன்னார் ஆயரும் நேரில் சென்று பார்வையிட்டார். இவர்களின் விபரங்களை சட்டமா அதிபரிடம் கேட்டிருக்கின்றோம். பாலேந்திரன் ஜெயக்குமாரி குறித்த விபரங்களையும் கேட்டிருக்கின்றேன்.
காணாமல் போனோர் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.திருகோணமலையில் கொலை செய்யப்பட்ட மாணவர்கள் குறித்த நடவடிக்கை எடுப்பதற்கான ஆலோசனையை நிபுணர் குழுவிடம் கேட்டிருக்கின்றோம். அதேபோல கொலைசெய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க தொடர்பான விசாரணைகளையும் விரைவுபடுத்துமாறு பணித்துள்ளோம் என நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.