றோவினால் பயிற்சியளிக்கப்பட்ட புலனாய்வாளர்களை பலாலியில் குடியேற்ற திட்டம்
மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி பதவியில் இருந்தாலும் உண்மையில் ரணில் விக்ரமசிங்கவே ஜனாதிபதியென தேசிய சுதந்திர முன்ணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவை எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிட வைக்கும் முதற்கட்ட முயற்சியாக சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் நேற்று பொதுக்கூட்டமொன்றை நடத்தியது.கொழும்பை அண்மித்த புறநகரான நுகேகொடையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் ஜனாதிபதியின் ஆசனத்திலேயே பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமர்கிறார், இதன் மூலம் தானே ஜனாதிபதி என்பதை அவர் எடுத்துக்காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸவை, சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவிக்க வேண்டுமெனவும் ரணில் விக்ரமசிங்கவை விட மஹிந்த மேலானவர் என்பதை தற்போதைய ஜனாதிபதி அறிவார் எனவும் விமல் வீரவன்ஸ கூறியுள்ளார்.
இதேவேளை, பலாலி அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் விடுவிக்கப்பட்ட ஆயிரம் ஏக்கர் காணியில் இந்தியாவில் இருந்து நாடு திரும்பவுள்ள அகதிகள் குடியமர்த்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இவர்களில் அகதிகள் மாத்திரமல்லாது இந்திய ஆராய்ச்சி மற்றும் ஒப்புநோக்கு கண்காணிப்பகமான (RAW) றோவினால் பயிற்சி அளிக்கப்பட்ட புலனாய்வாளர்களும் குடியேற்றப்படுவார்கள் என விமல் வீரவன்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.
இது நாட்டின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துவதற்காக அனுரகுமார திஸாநாயக்க தனது சிவப்பு நிற சட்டையை விற்பனை செய்துள்ளதாக இதன்போது அவர் தெரிவித்துள்ளார்.மஹிந்த ராஜபக்ஸ என்பது பெயரல்ல எனவும் அது நாடு எனவும் அவர் தோல்வியடையவில்லை எனவும் வீரவன்ச மேலும் கூறியுள்ளார்.