தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு தொடர்ந்தும் இடம்பெறுகின்றது - மன்னார் ஆயர்
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு தொடர்ந்தும் இடம்பெறுவதாக மன்னார் ஆயர் இராயப்பு யோசேப்பு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் புத்தக வெளியீட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள மக்களின் அதியுச்சமான சிங்கள தேசிய உணர்வின் அச்சத்தால் தமிழ் மக்களின் தனித்துவமான தேசிய அடையாளங்கள் அழிக்கப்படுவதாகவும் ஆயர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை சுதந்திரம் அடைந்தது என்ற விடயத்தில் தமிழ் மக்களுக்கு சுதந்திரம் என்பது ஓர் மாயையாக திணிக்கப்பட்டது என்றும் தமிழ் மக்கள் இன்னமும் சுதந்திரத்தை அடையாத நிலையில் வாழ்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நிறுத்தி இலங்கை அரசாங்கம் தமிழ் இனத்திற்கு எதிரான யுத்தத்தை இன்னமும் நிறுத்தவில்லை என்றும், தமிழ் மக்களின் உரிமைக்கு எதிராகவும் அபிலாசைகளுக்கு எதிராகவும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகவும் இதன்போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் போரில் கொல்லப்பட்ட பின்னர் தொடர்ந்தும் இந்த நாட்டில் தமிழ் மக்களை வாழ விடாது வெளிநாடுகளுக்குச் செல்லும் நிலமையை உருவாக்கியதுடன் அரசாங்கமே அவ்வாறு மக்களை அனுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது. அத்தோடு சர்வதேச விசாரணை அறிக்கை செப்டம்பர் மாதம் சமர்பிக்கப்பட வேண்டும் என்றும் அதனை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் என்றும் மன்னார் ஆயர் வலியுறுத்தியுள்ளார்.