லண்டனில் சம்பந்தன், சுமந்திரனின் படங்கள் எரிப்பு! (படங்கள், காணொளி இணைப்பு)
இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை அறிக்கையானது தமிழ்மக்களுக்கு எந்த தீர்வையும் வழங்கப் போவதில்லை என்ற போதும் அதைக்கூட சமர்ப்பிக்காமல் காலந்தாழ்த்துவதன் பின்புலத்தை நன்கு அறிந்தவர்களாகவும், தமிழ் மக்களாகிய நாமே எமக்கான உரிமைகளை வென்றெடுக்கவும் எமது மண்ணை மீட்கவும் நீதிக்கான போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்பதை நன்கு உணர்ந்தவர்களாகவும் நீதிக்கான கவனயீர்ப்புப் போராட்டத்தில் பல நூற்றுக்கணக்கான தமிழ் உறவுகள் உணர்வோடு கலந்து கொண்டனர்.
இப்போராட்டத்தின் போது பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் கந்தையா ராஜமனோகரன் அவர்களும் தமிழ் இளையோரமைப்பைச் சேர்ந்த சஞ்சய் அவர்களும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு செயற்பாட்டாளர் நியூட்டன் அவர்களும் உரையாற்றினர்.
அத்துடன் நீதிக்கான போராட்டத்தின் கோரிக்கைகளை உள்ளடக்கிய மனுவும் அமெரிக்கத் தூதரகத்தில் கையளிக்கப்பட்டது. மாலை 6 மணியளவில் நீதிக்கான கவனயீர்ப்புப் போராட்டம் நிறைவு பெற்றது.
இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரின் புகைப்படங்களை தீயிட்டுக் கொழுத்தியுள்ளனர்.
இலங்கை தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச்சபை விசாரணை அறிக்கையை தாமதமின்றி வெளியிட வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழக சமூகத்தினால் நேற்று நடைபெற்ற நீதிக்கான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக பிரித்தானியாவில் அமைந்துள்ள அமெரிக்க தூதுவராலயத்திற்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலேயே இவ்வாறு எரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.