Breaking News

சிறிலங்கா அறிக்கையை தாமதமின்றி வெளியிட வேண்டும் – நியுயோர்க் ரைம்ஸ்

போரின் போது இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக சிறிலங்காவில் நடத்தும் விசாரணை அறிக்கையை கால தாமதமின்றி வெளியிட வேண்டும் என்று நியுயோர்க் ரைம்ஸ் ஆசிரியர் தலையங்கத்தில் வலியுறுத்தியுள்ளது.

“தனது நாட்டில் நிலவிய மகிந்த ராஜபக்சவின் எதேச்சாதிகார ஆட்சி, ஊழல், குடும்ப ஆட்சி போன்றவற்றை நிராகரித்து எதிர்க்கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவை நாட்டின் அதிபராக தேர்ந்தெடுத்ததன் மூலம் ஒரு மாதத்திற்கு முன்னர் சிறிலங்காவானது முழு உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சிறிலங்காவில் புதியதொரு அத்தியாயத்தை அதிபர் சிறிசேன திறந்து நாட்டில் நம்பிக்கையை ஏற்படுத்துவார் என்கின்ற எதிர்பார்ப்புக்கள் நிலவுகின்றது.இதேவேளையில் சிறிசேன அதிபராகப் பொறுப்பேற்ற கையோடு நாட்டில் ஏற்பட்ட பழைய காயங்களை மீளவும் திறப்பதற்கான நடவடிக்கைகள் இன்னமும் எடுக்கப்படவில்லை.

ஆயினும் அடுத்த மாதம் ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில், சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த ஐ.நா விசாரணையுடன் தொடர்புபட்ட அறிக்கையை வெளியிடுவதில் சிறிலங்கா அரசாங்கம் தற்போது காலத்தைத் தாமதித்து வருகிறது.

சிறிலங்காவின் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற பல்வேறு மீறல்கள் தொடர்பாக, பரிந்துரைக்கப்பட்ட உள்நாட்டு விசாரணையை மேற்கொள்வதற்கான அனுமதியை வழங்குவதற்கான ஆதரவை சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் அமெரிக்காவிடமிருந்தும் ஐக்கிய நாடுகள் சபையிடமிருந்தும் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

போரின் இறுதிக்கட்டத்தில் 40,000 வரையான தமிழ்ப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர் என ஐக்கிய நாடுகள் சபை உறுதிப்படுத்தியிருந்தது.இது தொடர்பான ஐ.நாவின் விசாரணைக்கு மகிந்த ராஜபக்ச தனது ஒத்துழைப்பை வழங்க முற்றிலும் மறுத்துவிட்டார்.மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் மக்களின் காயங்களை ஆற்றுவதற்கான சாதகமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள பல நூறு வரையான தமிழ் இளையோர்களை விடுவிப்பதாகவும், வர்த்தக அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக சிறிலங்கா இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலங்களை மீளவழங்குவதாகவும் சிறிசேன அரசாங்கம் வாக்குறுதி வழங்கியுள்ளது.

தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட வடக்கு மாகாணத்திற்கான புதிய சிவில் ஆளுநர் ஒருவரை சிறிசேன அரசாங்கம் நியமித்துள்ளதுடன் வடக்கு மாகாணத்திற்குள் வெளிநாட்டவர்கள் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த போக்குவரத்துத் தடையையும் நீக்கியுள்ளது.

மகிந்த ராஜபக்சவும் அவருடைய சகோதரரும் பாதுகாப்புச் செயலருமான மிக மோசமான போர்க்குற்றங்களைப் புரிந்த கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் தற்போதும் தேசிய அரசியற் படைகளாகச் செயற்படுகின்றனர்.தற்போதைய புதிய அரசாங்கம் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் தனது கவனத்தைச் செலுத்தியுள்ளது.

எதுஎவ்வாறிருப்பினும், கடந்த காலத்தில் ஏற்பட்ட மீறல்களுக்கு சட்டரீதியான தீர்வை வழங்கவேண்டிய பொறுப்பை சிறிசேன அரசாங்கம் கொண்டுள்ளது.ஐக்கிய நாடுகள் சபைக்கான அறிக்கையை சிறிலங்கா காலதாமதமின்றி முன்வைக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை இந்த விடயத்தில் தொடர்ந்தும் ஈடுபாடு காண்பிக்க வேண்டும்.

இது புதிய அதிபராகப் பதவியேற்றுள்ள மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக இருக்கமாட்டாது.சிறிலங்காவில் இடம்பெற்ற பல்வேறு மீறல்கள் தொடர்பாக சுயாதீனமானதும் வேகமானதுமான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதற்கு உத்தரவாதத்தை வழங்குவதற்கான ஒரு சிறந்த வழியாகும்.

இதேபோன்று சாட்சியக்காரர்கள் பாதுகாக்கப்படுவதற்கும் குற்றவாளிகள் இறுதியாகத் தண்டிக்கப்படுவதற்கும், சிறிசேன அரசாங்கம் தனது பக்க அறிக்கையை எவ்வித காலதாமதமுமின்றி முன்வைப்பதுடன், இதுதொடர்பில் ஐ.நா தனது நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்க வேண்டும்.“ என்று கூறப்பட்டுள்ளது.