ஐ.நா விசாரணைக்கு இலங்கை உதவ வேண்டும் - பான் கீ மூனின் பேச்சாளர்
உள்நாட்டு விசாரணைகளை நடத்தப் போவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தாலும், ஐ.நா விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டும் என்பதே ஐ.நா பொதுச்செயலர் மற்றும் ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் நிலைப்பாடு என்று ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நியுயோர்க்கில் நேற்று முன்தினம் ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக்கிடம், போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் உள்நாட்டு விசாரணைகளை நடத்தப் போவதாக அறிவித்துள்ளது குறித்து கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்குப் பதிலளித்த ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக்,
“நிச்சயமாக நாம் அதனை வரவேற்கிறோம். சிறிலங்காவில் என்ன நடந்தது என்பதை வெளிச்சத்துக்குக் கொண்டு வர உதவும் எந்த நகர்வையும் நாம் வரவேற்போம்.
ஆனால், ஐ.நா விசாரணைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்பதே, ஐ.நா பொதுச்செயலரினதும், ஐ.நா மனித உரிமை ஆணையாளரினதும் அழைப்பாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.