Breaking News

ஊழல்- மோசடிகளை விசாரிக்க சிறப்பு ஜனாதிபதி ஆணைக்குழு

இலங்கையில் பெரும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுப்பதற்காக சிறப்பு ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமிக்கவுள்ளதாக புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வடமத்திய மாகாணத்தில் அரலகங்வில பிரதேச மக்கள் முன்னிலையில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை கிடைக்கும் என்று  மக்கள் காத்திருப்பதாகக் கூறியுள்ளார்.

ஜனாதிபதிக்கு உள்ள சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி, இந்த வாரத்தில் ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்படும் என்று மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

'இந்த ஆணைக்குழுவின் மூலம் சின்னஞ்சிறிய நெத்தலி மீன்களை அல்ல, பெரிய சூறா மீன்களை பிடிப்பது தான் நோக்கம்... இந்த ஊழல், மோசடி பேர்வழிகளுக்கு எப்போது தண்டனை அளிக்கப்படும், என்று நாட்டு மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்' என்றார் மைத்திரிபால சிறிசேன.

புதிய அரசாங்கம் பொறுப்பேற்று ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் ஊழல், மோசடி குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்கனவே தாமதாகியுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.

மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் மீது பெரும் ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தே பொது எதிரணிக் கூட்டணி மைத்திரிபால சிறிசேனவை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.