Breaking News

ஐ.நா தமிழர்களை புறக்கணிக்கின்றதா?- கூட்டமைப்பு கவலை


போர் குற்றம் தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கையை செப்டெம்பர் மாதம் வரை ஒத்திவைப்பதற்கு எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.

போரினால் பேரழிவை சந்தித்த தமிழ் மக்கள், மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவிருந்த போர் குற்ற விசாரணை அறிக்கை ஊடாக தமக்கு ஓரளவுக்ககேனும் நீதி கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த போதிலும், அதற்கும் வழியில்லாமல் போயுள்ளது குறித்து மிகுந்த வேதனையடைந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் மனித உரிமைகள் பேரவையின் இன்றைய தீர்மானம், தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதில் ஐ.நா வுக்கு அக்கறை இல்லையோ என்று கருதும் நிலைக்குத் தள்ளியுள்ளதாகவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இந்தத் தீர்மானம் சிறிலங்கா அரசாங்கத்திற்கு சாதகமாக இருந்தாலும், நீதியை எதிர்பார்க்கும் தரப்பினருக்கு கிடைத்த பெரும் ஏமாற்றம் என்றும் சுரேஷ் மேலும் தெரிவித்தார்.