சீனாவிடம் பணிந்தது மைத்திரி அரசு
கொழும்புத் துறைமுக நகர கட்டுமானத் திட்டத்தைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கு இலங்கையின் புதிய அரசாங்கம், சீனாவின் தொடர்பாடல் கட்டுமான நிறுவனத்துக்கு அனுமதி அளித்துள்ளது.
1.4 பில்லியன் டொலர் செலவிலான இந்த திட்டத்தை, மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன் செய்து கொண்ட உடன்பாட்டுக்கு அமைய, சீனா முன்னெடுத்து வந்தது.
ஆனால், தாம் ஆட்சிக்கு வந்தால், இந்த திட்டத்தை நிறுத்துவோம் என்று தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக வாக்குறுதி அளித்திருந்தார்.புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், இந்த திட்டம் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான போதிலும், தொடர்ந்து கட்டுமானப் பணிகள் இடம்பெற்று வந்தன.
இந்தநிலையில், நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த திட்டத்தை தொடர்வதற்கு அனுமதி அளிப்பதென முடிவெடுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன இந்த தகவலை நேற்று அறிவித்தார்.
சீன அரசாங்கத்தினால் முதலீடு செய்யப்பட்டுள்ள இந்த வர்த்தக திட்டத்தை இந்தக் கட்டத்தில் இடைநிறுத்துவதால், சீனாவுடன் நீண்டகாலமாக கொண்டுள்ள உறவு தேவையின்றிப் பாதிக்கப்படும் என்று அரசாங்கம் கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அதேவேளை, கொழும்பு துறைமுக நகர திட்டம் தொடர்பாக, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த மாதம் சீனாவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தின் போது, கலந்துரையாடுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்டம் தொடர்பாக ஏற்கனவே, இலங்கைக்கான சீனத் தூதுவர் வூ ஜியாங்வோ, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து பேச்சு நடத்தியதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.இந்த திட்டத்துக்கு இந்தியா அதிகாரபூர்வமாக எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.சீன நீர்மூழ்கிகள் இலங்கை கடற்பரப்புக்கு தொடர்ச்சியாக வருவது குறித்தே இந்தியா எதிர்ப்புத் தெரிவித்தாகவும் அவர் கூறினார்.