புலிக்கதைகளை கூறி நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதிச் சூழலை குழப்பியடிக்கவேண்டாம் - சோபித தேரர்
புலிக் கதைகளையும் சர்வதேச பழிவாங்கல் கதைகளையும் கூறி தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியான சூழ் நிலையினை குழப்ப வேண்டாம். தேசிய அரசாங்கத்தினை அமைக்க கடுமையாக பாடுபட்டோம். அதேபோல் இவ் அரசாங்கம் நாட்டிற்கு அச்சுறுத்தலானதாக தெரியுமாயின் அதனையும் மாற்றியமைப்போம் என சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் இணைப்பாளரும் கோட்டே நாகவிகாரையின் விகாராதிபதியுமான மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்தார்.
தேசிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் பிரிவினைவாதமாக உள்ளதென எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ள நிலையில் தேசிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் முரனானதா என வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
சர்வாதிகார ஆட்சியில் சிக்கிக் கிடந்த நாட்டினை மீட்டெடுக்க நாம் மிகப்பெரிய சவால்களை எதிர்கொண்டோம். எமது உயிர்களை பணயம் வைத்தே ஆட்சி மாற்றத்திற்காக போராடினோம். சிங்கள தமிழ், முஸ்லிம் இனவாதிகளின் செயற்பாடுகள் பரவிக் கிடந்த போதும் அவை அனைத்திற்கும் அப்பால் மக்களை ஒன்றிணைத்து மூவின மக்களினதும் நாட்டினை உருவாக்கிக் கொடுத்துள்ளோம். எமது பொது எதிரணியினை உருவாக்க முன்னர் பலர் உப கதைகளை பரப்பியதும் எதிரணி வேட்பாளர் யாருமில்லை என கேலி செய்து கொண்டிருந்த போதும் சகலரையும் ஒன்றிணைத்து பொது எதிரணியினை உருவாக்கிக் கொடுத்த எமக்கு அதன் மீதான நம்பிக்கையும் அதிகமாகவே உள்ளது.
நாட்டில் இப்போது மக்கள் அனுபவிக்கும் நல்லதொரு சமாதானமான ஆட்சி அமைந்துள்ளது. நல்லாட்சிக்கான வழி திறந்துள்ளது. இப்போது மக்களின் ஒற்றுமையினை சிதறடித்து நாட்டில் குழப்பத்தினை ஏற்படுத்தும் வகையில் விளக்கங்களை முன்வைக்கின்றனர். பிரிவினைவாதமெனவும் சர்வதேசத்தின் பழிவாங்கலுக்கு நாட்டை உட்படுத்துவதாகவும் கருத்துக்களை தெரிவிப்பதால் நாடு பிளவுபடப் போவதில்லை. அதேபோல் அமைந்திருக்கும் தேசிய அரசாங்கத்தின் மூலம் நாட்டை பிளவுபடுத்த எவரேனும் நினைத்திருந்தால் அதற்கும் நாம் இடம்கொடுக்கப் போவதில்லை. நாம் எப்போதும் மக்களின் நலன் கருதியே சிந்திக்கின்றோம். எனவே, மக்களை கஷ்டப்படுத்தும் ஆட்சிக்கு ஒருபோதும் உதவி செய்ய மாட்டோம் எனவும் அவர் தெரிவித்தார்.