Breaking News

ஆட்சி மாற்றம்! தமிழர்கள் இன்றும் அச்சத்தில்

இலங்கையில் நல்லாட்சி மாற்றத்தின் பின்னரும் வடக்கு, கிழக்கில் தமிழர்களின் வாழ்வில் இன்னமும் எவ்வித விமோசனம் கிடைக்கவில்லை. என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

கோட்டை நாகவிகாரையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்

 தமிழர்கள் தொடர்ந்தும் பயத்துடனேயே தமது வாழ்வில் சுதந்திர உணர்வின்றி வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். தமிழர்களின் பொது வாழ்வியலானது இராணுவத் தரப்பினரால் கட்டுப்படுத்தப்படுகின்றது.

அருட்தந்தை ரீட் ய­ல்டன் பெர்னாண்டோ இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில்

 "கடந்த வாரத்தில் வடக்கு, தெற்கு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அருட்தந்தையர்கள் அடங்கிய குழுவினரை மட்டக்களப்பில் சந்தித்தோம். இங்கு எமது அங்கத்தவர்கள் நேரடி அவதானிப்பை மேற்கொள்ள முற்பட்டபோது புலனாய்வாளர்களால் மட்டுப்படுத்தப்பட்டனர். நல்லாட்சி மாற்றம் ஏற்படுவதாகக் கூறுகின்றனர். ஆனால், இன்னமும் பழைய நிலைமையே கிழக்கில் காணப்படுகின்றது. 

இந்த நிலையை மாற்றவேண்டியது அவசியம். எமக்கிடையில் பிழையான எண்ணங்கள் இருப்பின் அவற்றைக்களையவேண்டும். நாம் பயன்படுத்தும் வசனங்களில் மாற்றம் ஏற்படுத்துப்படவேண்டுமாயின் அது முதற்கொண்டு மாற்றம் ஏற்படுத்தப்படவேண்டும். தெற்கிலிருப்பவர்களுக்கு மட்டுமன்றி, நல்லாட்சியின் பலாபலனை வடக்கு, கிழக்கு மக்களுக்கும் பெற்றுக்கொடுக்கவேண்டும். வடக்கு, கிழக்கில் தமிழர்கள் இன்னமும் அச்சத்துடனேயே வாழ்கின்றனர். நல்லாட்சி மாற்றம் ஏற்பட்ட போதும் எவ்விதமான சுதந்திர உணர்வையும் அவர்களிடம் காணமுடியவில்லை. 

வியாபார நடவடிக்கை முதற்கொண்டு சுதந்திரமாகச் செய்யமுடியாத நிலைமையே காணப்படுகின்றது. சிவில் வாழ்வுக்குரிய விடயங்கள் இராணுவத்தினரால் கட்டுப்படுத்தப்படுகின்றன என்பதை அங்கு மேற்கொண்ட விஜயங்களினூடாக அறிந்துகொண்டோம். மனித உரிமைகளுக்கான மதத்தலைவர்கள் அமைப்பைச் சேர்ந்த 25 பேர் இப்பகுதிக்கு விஜயங்களை மேற்கொண்டோம். வருடத்தில் இரு தடவை நாம் சந்திப்பதுண்டு. அந்தவகையிலேயே இந்தச் சந்திப்பும் இடம்பெற்றது. 

தெற்கிலுள்ளவர்களுக்கு மட்டுமன்றி, வடக்கு, கிழக்கிலுள்ளவர்களுக்கும் நீதி கிடைக்க அரசு வழிகோல வேண்டும். காணிப் பிரச்சினை, வேலையில்லாப் பிரச்சினை ஆகியன அங்கு பெரும் பிரச்சினையாக உள்ளன. இதனைத் தவிர, தமிழர்களுக்கு ஏராளமான தேவைகள் உள்ளன. அவற்றைத் தீர்த்துவைப்பதற்கு அரசு ஆக்கபூர்வமாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். 

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட கோட்டை நாகவிகாரையின் விகாராதிபதியும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவருமான மாதுளுவாவே சோபித தேரர் “மாற்றத்தை வேண்டி தமிழர்கள் எம்முடன் ஒன்றுசேர்ந்திருந்தமை இம்முறை தேர்தலின் விசேட அடையாளமாக அமைந்திருக்கின்றது. இதேபோன்று சுதந்திர தின வைபவத்தில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் தமிழ்த் தலைவர்கள் பங்கேற்றிருக்கின்றனர். இது சிறந்த செயற்பாடாகும். இதுபோன்ற நல்லெண்ண செயற்பாடுகள் தொடர்ந்து ஊக்குவிக்கப்பட்டு பாதுகாக்கப்படவேண்டும். ஒரே நாட்டிற்குள் அனைத்து வளங்களையும் பகிர்ந்துகொண்டு ஒற்றுமையாக வாழ்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என தெரிவித்துள்ளார்.